சமூக ஏற்பாட்டாளர் பியத் நிகேஷலவின் நலம் விசாரித்த எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர் இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்
தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஏற்பாட்டாளர் பியத் நிகேஷலவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வைத்தியசாலையில் பார்வையிட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பத்தரமுல்லை, கொஸ்வத்தை சமகி மாவத்தை பகுதியில் தாக்குதலுக்குள்ளானார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன சந்தேகத்தின் பேரில் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன்போது காயங்களுக்குள்ளான சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதேவேளை, கடுவளை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவின் திட்டமிட்ட குழுவினால் கடந்த 10ஆம் திகதி பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் நாட்டில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் விநியோகிக்கப்படுவதாகவும், உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பல்வேறு பிரசாரங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW

