துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு! - 60 பேர் பலி,754 படையினர் சரண் முள்ளிநியூஸ்

துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு! - 60 பேர் பலி,754 படையினர் சரண்



Topics :
               #Turkey #War

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி பிரதமர் பினலி யில்த்ரிம் எச்சரித்துள்ளார்.

சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த இராணுவத் தலைமை தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.

சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலதிக இணைப்பு)

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு: 62 பேர் பலி,754படையினர் சரண்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 754 படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர்.

பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு ஆண்கள் கையை மேலே தூக்கியபடி வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

தலைநகர் அங்காராவில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு முழுவதும் அங்காராவில் இருந்த பாராளுமன்றக் கட்டிடம் மீது டாங்கிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தவர்கள் கடத்தியுள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தும்படி துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சதியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 62 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் சிவிலியன்கள்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW