மனதை ஒருமுகப்படுத்தும் நடராஜாசனம் பற்றி தெரியுமா?
மனதை ஒருமுகப்படுத்துவது என்பது கடினமான விஷயம்தான். அதுவும் குழந்தைகளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்து அரை மணி நேரம் படிப்பது என்றாலே மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. பெரியவர்களுக்கு மன அழுத்தம் காரணமாக வேலையில் ஒன்றாமல் இருப்பது, என எல்லாருக்குமே இது கை கூடாத விஷயமாகவே இருக்கிறது.
இந்த மாத்திரை சாப்பிட்டால் ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும் என நிறைய விளம்பரங்கள் வந்தாலும் அவை நிரந்தர தீர்வினை தரமுடியாது. யோகாவில் உள்ள நடராஜாசனம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும். இது நாட்டியத்தின் இறைவனான நடராஜனின் தோற்றம் போல் இந்த ஆசனம் செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இந்த ஆசனத்தால் மனதை ஒருமுகப்படுத்துதல் மட்டுமன்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கும் தீர்வுகள் தருகின்றது.
ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்யும்போது, பேலன்ஸ் செய்ய கடினமாக இருந்தால் சுவற்றைப் பிடித்துக் கொண்டு செய்யலாம். நாளடைவில் பழகியவுடன் சுவரைப் பிடிக்காமல் இந்த யோகாவை செய்யலாம். எப்படி செய்வது எனப் பார்க்கலாம் செய்முறை : நேராக தடாசனத்தில் நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட்டபடி, வலது காலை பின்னாடி தூக்குங்கள். வலது காலை வலது கையால் பிடித்துக் கொள்ளவும்.
உங்களின் மொத்த எடையையும் இடது கால் தாங்கும்படி பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்போது மெதுவாக இடதுகையை முன்னாடி நீட்டவும். உங்களின் நீட்டிய இடது விரல்களுக்கு நேராக உங்கள் பார்வையை குவியுங்கள்.
இந்த நிலையில் 20 நொடிகள் நிற்கவும். பின்னர் மெதுவாய் கால், கைகளை தளர்த்து இயல்பு நிலைக்கு வாருங்கள். இப்போது இடது காலுக்கு செய்ய வேண்டும். இவ்வாறாக வலது காலில் இரண்டு முறை, இடது காலில் இரண்டு முறை செய்யவும். பலன்கள் : உடல் எடை குறையும், இடுப்பு, கால்,கைகளுக்கு பலம் தரும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும்.
குறிப்பு : குறைவான ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW