"பள்ளிவாசல் விவகாரத்தில், சட்டம் ஒருதலைப்பட்சமாகவே அமுல் நடாத்தப்பட்டுள்ளது"

தெஹிவளை –பாத்யா மாவத்தை பள்ளிவாசலின் கட்டட நிர்மாணத்திற்காக தெஹிவளை –கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்த கட்டட நிர்மாண அனுமதிப் பத்திரத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை இரத்துச் செய்துள்ளமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
பாத்யா மாவத்தை பௌசுல் அக்பர் பள்ளிவாசல் நிர்வாக சபை இந்த வழக்கினை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. பிரதிவாதிகளாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ். பி.ரத்நாயக்க மற்றும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளர் தம்மிக்க முத்துகல ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரிவிக்கையில் 'பாரிய நகரம் மற்றும் மேற்காசிய அபிவிருத்தி அமைச்சில் பாத்யா மாவத்தை பள்ளிவாசல் கட்டட நிர்மாணம் தொடர்பான பிரச்சினை ஆராயப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பள்ளிவாசலுக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் பின்பே பள்ளிவாசலின் நிர்மாணப் பணிக்கு வழங்கப்பட்டிருந்த கட்டட அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தலைப்பட்ச கலந்துரையாடலாகும்.
பேச்சுவார்த்தைக்கு பள்ளிவாசல் நிர்வாகமும் அழைக்கப்பட்டு அவர்கள் பக்க நியாயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அனுமதிப்பத்திர இரத்து அறிவித்தல் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் தெஹிவளை –கல்கிசை மாநகர சபை ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டு அந்த அறிவித்தலின் பிரதியொன்றே பௌசுல் அக்பர் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் நேரடியாக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் பௌசுல் அக்பர் பள்ளிவாசல் விவகாரத்தில் சட்டம் ஒருதலைப்பட்சமாகவே அமுல் நடாத்தப்பட்டுள்ளது. பாத்யா மாவத்தையில் சமய ஸ்தலமே நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருணையும் சமாதானமும் நல்லிணக்கமுமே போதிக்கப்படுகிறது. மக்கள் அங்கு நல் வழிப்படுத்தப்படுகிறார்கள். எனவே கட்டட நிர்மாணப் பணிக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.
தெஹிவளை கல்கிசை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.யூசூபை 'விடிவெள்ளி' தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது. 'நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம் ஒரு தலைப்பட்சமாகும்.
எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படாது பள்ளிவாசலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளமை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.
வீடொன்றுக்குள் பள்ளிவாசலொன்று இயக்கப்பட்டுவருவதாக பிரதேச மக்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமயப் பாடசாலையொன்றுக்கான கட்டட நிர்மாண அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவையும் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே அந்த அனுமதியை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொண்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெஹிவளை –கல்கிசை மாநகர சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள 2016.06.29 ஆம் திகதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதியே பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.