வெளிமாகாணத்தவரை வடக்கில் குடியேற்றுவது தனித்துவத்தை தொலைப்பதற்கு ஒப்பானது முள்ளிநியூஸ்

வெளிமாகாணத்தவரை வடக்கில் குடியேற்றுவது தனித்துவத்தை தொலைப்பதற்கு ஒப்பானது

வெளி மாகாண மக்களை வட மாகாணத்தில் குடியேற்றுவது தமிழர்களுடைய தனித்துவத்தை தொலைப்பதற்கு ஒப்பானது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டிபன் டியோன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே வட மாகாண முதலமைச்சர், கனடா வெளிவிவகார அமைச்சருக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தனது நாட்டு மக்கள் கண்ணும் கருத்துமாக உள்ளதாக கனடா வெளிவிவகார அமைச்சர் தன்னிடம் கூறியதாக ஊடகவிலயாளர்களிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடா வெளிவிவகார அமைச்சருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில், இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெறுவதற்காக சகல நடவடிக்கையும் எடுப்பதற்கு கனடா நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

எந்தத் தருணத்திலும் ஸ்ரீலங்கை மக்கள் நன்மைபெறுவதற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கனடாவிலுள்ள தமிழ் பேசும் மக்கள் மிக நல்ல நிலையில் உள்ளதாகவும் அவர்களுடைய வாழ்க்கை முறை நன்றாக இருக்க வேண்டும் என்பதில் தமக்கு ஆர்வம் உள்ளதாகவும் எடுத்துக்காட்டினார்.

தங்களால் முடியுமான சகல உதவிகளையும் இலங்கை மக்களுக்கு செய்யவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் ரீதியான நிலை என்ன என்பதை அறிந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா இதுவரை காலமும் எதிர்கொண்ட நிலைக்கு ஒப்பான நிலையை கானடாவிலுள்ள கியூபெக் மாநிலத்திலுள்ள பிரன்சு மக்களுடான பிரிவினைவாதம் சம்பந்தமான பிரச்சினையை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்த்து கனடா கூடிய வலுவுடன் முன்னேறிக் கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டி, அதே மாதிரியான நிலையை இலங்கை அடையுமா என்றும் எங்களிடம் கேட்டார். இதற்கு ஏதாவது தடைகள் இருக்கின்றனவா என்றும் கேட்டார்.

அதற்கு நான் கூறினேன், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் அப்பபேற்பட்ட நிலை இருந்தது. நாடு பூராகவும் தமிழ் மக்கள் வீடுகள் வாங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். எந்தவிதமான தடைகளும் இருக்கவில்லை. யாரும் எங்கும் போய் வந்த காலங்கள் இருந்தன.

ஆனால், இன்று 1986 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் மட்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்து, தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, அரசியல் ரீதியான பல பிரச்சினைக்கு அளானதை எடுத்துக்காட்டினேன்.

நாட்டின் ஒருமைப்பாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த அடிப்படையில் தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனக் கூறினேன்.

நாங்கள் பிரிவினைக்கு ஆதரவு அளிக்கவில்லை. நாட்டில் எங்களுடைய தனித்துவம் பேணப்படவேண்டும். பாராம்பரியமாக எங்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடு, என்பன நாட்டின் மத்தியபாகத்தில் இருந்தவர்களுடன் வித்தியாசமாக இருந்ததன் காரணமாக அவை பேணப்பட வேண்டும் எனக் கூறினேன். அதனையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர் ஒரு வித்தியாசமான கேள்வியை என்னிடம் கேட்டார். நீங்கள் தமிழர் என்றும் இலங்கையர் என்றும் கூறுவதில் பெருமையடைவீர்களா? என்று கேட்டார். இலங்கையர் என்ற முறையிலே இலங்கை நாட்டு தமிழ் மக்கள் என்றுதான் நாங்கள் முன்னர் இருந்திருக்கின்றோம். ஆகவே அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழர்களுடைய பாராம்பரியம், வரலாறு, கலாசாரம் பேணப்படவேண்டும் என்பதை தான் எடுத்துக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், யாழ் பொது நூலகத்திற்கும், யாழ்ப்பாணத்தில் கனடாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள விருந்துபசார ஹோட்டல் ஒன்றிற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















                                          இதனை நண்பர்களுடன் பகிரவும்.


                                  உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும் செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW