பொரலஸ்கமுவ பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம் : கைது செய்ய நடவடிக்கை

தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவந்த பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்களைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசலுக்குள் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள தாக்குதல் தாரியினுடையது எனச் சந்தேகிக்கப்படும் கைக்கடிகாரம் உள்ளிட்ட சில தடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசலுக்குள் புகுந்துள்ள அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் கல்கிசை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் ஒரு குழுவும் கல்கிசை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகளின் படி, குறைந்த பட்சம் இரு தாக்குதல்தாரிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கும் பொலிஸார் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட தடயங்களை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. நேற்று மாலை வரை சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி பொரலஸ்கமுவ பெபிலியான பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடை விற்பனை நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொரலஸ்கமுவையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் நடவடிக்கைகள் அதிகரித்ததுடன் அதன் ஒரு அங்கமாக பள்ளிவாசலை பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் உள்ள நிலையில், பள்ளிவாசல் மீதான தாக்குதலானது பிரதேசத்தில் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடிவெள்ளி பத்திரிகை
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW