50 புதிய தொழில் சந்தைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டம்.

கண்டியில் இருந்து அம்பந்தோட்டை வரை 50 புதிய தொழில் சந்தைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளோம் அன்று பியகமவில் ஏற்படுத்திய மாற்றத்தை முழுநாட்டுக்கும் கொண்டுசெல்லவுள்ளோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகின்றோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நாடுபூராகவும் இடம்பெற்றுவருகின்றது. அதன் மற்றுமொரு கட்டமாக நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பில் நான் இருக்கும் போது கட்சியின் தலைவராக ஜே.ஆர் ஜெயவர்த்தன சிறந்த தலைமைத்துவத்தை கொடுத்துவந்தார். அத்துடன் நாங்கள் சந்தித்த தேர்தலில் வெற்றிகொண்டு ஆட்சியை அமைத்தோம். அப்போது நான் பியகம தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேன். பியகம தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாக இருந்ததால் அது எந்தவித முன்னேற்றமும் இல்லாத பிரதேசமாகவே காணப்பட்டது.
ஆட்சி அமைத்ததும் இளைஞர்களுக்கு தொழில்வாய்புக்களை பெற்றுக்கொடுப்பதே எமக்கு இருந்த பிரச்சினையாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தல் தொழிற்சாலைகளை ஆரம்பித்தல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் அளித்தல் என்ற விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் ஆரம்பமாக கட்டுநாயக்க வர்த்தக சந்தை ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் அங்கு வர ஆரம்பித்தனர். இதனால் அந்த பகுதியில் இளைஞர்களுக்கு வேலை;வாய்புக்கள் கிடைக்கப்பெற்றன.
அதேபோன்று பியகம தொகுதி இளைஞர்களுக்கு தொழில் பிரச்சினையை தீர்ப்பதென்றால் இந்த பகுதிக்கும் வர்த்தக சந்தை ஏற்படுத்த வேண்டும் என நான் ஜே.ஆர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தேன்.
அவரும் அதற்கு அனுமதித்தார். என்றாலும் இந்த பகுதி எந்த முன்னேற்றமும் இல்லாத பிரதேசம் காரணமாக வர்த்தக சந்தை அமைக்கப்படுவதற்கு சிலர் எதிர்த்து வந்தனர்.
அத்துடன் இந்த பகுதிக்கு வர்த்தக சந்தை ஏற்படுத்தப்படும் போது மேலும் சிலர் ஒரு வர்த்தக சந்தை போதும் என கூறியதுடன் அவ்வாறு அமைப்பதென்றால் வேறு பிரதேசமொன்றுக்கு இதனை கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். என்றாலும் இந்த பகுதிமக்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் கரங்களில் பணம் கிடைக்கவேண்டும் என நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால் நாங்கள் எடுத்த முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டதால் 2அஆவது வர்த்தக சந்தை இங்கு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் அதன் பிறகு இந்த பிரதேசம் முன்னேற்றமடைய ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து பாதைகள் ஆரம்பிக்கப்பட்டன. சபுகஸ்கந்த எண்ணெய் குழாய், பொன்டேரா பால் கம்பனி, கொகாகோலா நிறுவனம் சந்திரிகாவின் இவ்வாறு பாரிய வர்த்தக நிலையங்கள் தற்போது இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தான் நாங்கள் கைத்தொழில் பேட்டைகளை கிராமங்களுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி பிரேமதாஸ நாடுமுழுவதும் கிராமங்களை மையப்படுத்தி 200 ஆடைத்தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்.
அத்துடன் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல விரும்பக்கூடியவர்களே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தனர். கட்சியை பிளவுபடுத்த யாருக்கும் இடமளிக்கவில்லை. எதிர்க்கட்சியில் 20 வருடங்கள் இருந்தும் கிராமத்தின் முன்னேற்றதிற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சியை கைவிடவில்லை.
அதன் காரணமாகத்தான் தற்போது கண்டியில் இருந்து அம்பந்தோட்டை வரையில் 50 புதிய தொழில் சந்தைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதற்காக சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே கைத்தொழில் நிலையங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததுபோன்று தகவல் தொழிநுட்ப துறையையும் கிராமங்களுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW