முஸ்லிம் அரசியல் தலைமைகளே!!!!!.....மௌனங்கள் மக்களை மிக வேதனைப்படுத்துகிறது

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி கௌரவ ஜனாதிபதியையும் நல்லாட்சியையும் தெரிவு செய்ததில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகப் பிரதானமானது ஆகும். அதனடிப்படையில் இன்று சிறுபான்மை மக்களுக்குரிய உரிமைகளை அவர்கள் அனுபவிக்க கூடிய வகையில் அதற்கு தேவையான அடிப்படை உரிமைகளை மக்களின் விருப்பத்துடனும் சர்வேதத்துடனும் இணைந்து அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து கொண்டு இருக்கிறது.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற ரீதியில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரிய முன்னெடுப்புகளும் நாட்டின் இறைமைமையை பாதிக்காத வகையிலும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் செய்யப்படும் என்பது தெளிவான உண்மை.
எவ்வாறாயினும், இவ் அரசியல் அமைப்பு திருத்தமானது பிரதானமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு மத சுதந்திரம் போன்ற விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தக்கூடியவாறு அமையவுள்ளது என்பதே உண்மையான நிலைப்பாடு ஆகும். அதிலும், தமிழ் முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வு விடயமே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
எனினும் தமிழ் மக்களுக்குரிய தீர்வு விடயத்தில் சர்வதேம், அரசாங்கத்திற்கு பல விதமான திணிப்புகளை மேற்கொள்ளுவதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள கூடியதாகவுள்ளது.
எவ்வாறாயினும் தமிழ் தலைமைகளை பொறுத்த மட்டில் தங்களின் முடிவுகளை தெளிவாக நல்லாட்சி அரசாங்கத்திற்கும் சர்வதேத்திற்கும் சொல்லிவிட்டார்கள். "இணைந்த வடகிழக்கில் சமஷ்டி ஆட்சி" என்பதே அவர்களின் தீர்மானமாகும்.
ஆனால், முஸ்லிம் தலைமைகள் முஸ்லிங்களுக்குரிய தீர்வு விடயத்தில் பெரிதாக எதையும் செய்யவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடு ஆகும். ஆங்காங்கே சிறு சிறு கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றாலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தங்களின் தெளிவான நிலைப்பாடு இதுதான் என்றும் அதன் செயற்திட்டங்கள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்றும் முன்மொழியவில்லை என்பது கசப்பான உண்மை ஆகும்.
மேடைகளில் பேசுவதன் மூலமோ ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதன் மூலமோ சமூக வலைத்தளங்களில் எழுதுவதன் மூலமோ இலங்கை முஸ்லிங்களுக்குரிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்று கொடுக்க முடியாது என்பதை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தெரியாமலும் இல்லை. தங்களின் அரசியல் இருப்பிற்காகவும் சுயநல அரசியல் கொள்கைகளுக்காகவும் இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்களும் அறியாமல் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் தலைமைகளின் இச்செயற்பாடானது இலங்கை முஸ்லிங்களை சக இன சமூகத்திடம் அடகு வைப்பதற்கு சமனானதாகவே தற்போதைய சூழ்நிலைகளில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. இந்த நிலையில் இருந்து முஸ்லிம் தலைமைகள் மாற வேண்டும்.
இலங்கை முஸ்லிங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் போன்றன; இலங்கை முஸ்லிம் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தனிப்பட்ட நிலைப்பாடுகளை கொண்டு இருந்தாலும்,
அந்நிலைப்பாடுகளில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி மட்டுமே, தமிழ் அரசியல் தலைமைகளின் இணைந்த வடகிழக்கு எனும் கோசத்தை எதிர்த்து; வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கிறார்கள். ஆனால், இத்தீர்மானம் இலங்கை முஸ்லிம் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? என்பதை தெளிவுபடுத்தவுமில்லை. அது மட்டும் இல்லாமல் இந்நிலைப்பாடு நல்லாட்சி அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் இது வரை கொண்டு சொல்லப்பட்டுள்ளதா? எனும் கேள்வியும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில் ஏனைய பெருங்கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸினதும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினதும் நிலைப்பாடு மௌனமாகவே காணப்படுகிறது.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு செல்லும் கட்சிகளின் மௌனங்கள் மக்களை மிக வேதனைப்படுத்துகிறது என்பதை நிகழ்கால நிகழ்வுகள் சுட்டி காட்டி நிக்கிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிங்களின் ஏகபோக உரிமை கொண்ட கட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான மக்கள் பிரதிநிதிகளின் பல்வேறுவிதமான ஊடக அறிக்கைகள் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை வேதனைப்படுத்தும் செயலாகவே காணப்படுகிறது.
இப்போது மௌனம் கலைக்க வேண்டிய மிக பொருத்தமான காலகட்டத்தை அடைந்துள்ளோம். மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்கள் இன்று (அதாவது 31.08.2016) இலங்கை வருகிறார்.
இவரின் வருகை இலங்கையுடனான அரசியல் செயற்பாடுகளையும் பற்றியும்; இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும்; இலங்கையில் பொருளாதார ரீதியிலான பல முன்னெடுப்புகளை கொண்டதாகவும்; மத நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றங்களை பார்வையிடுவதாகவும் காணப்படுகிறது. என்றாலும் பிரதான பேசுபொருளாக சிறு பான்மை மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் அமைப்பு திருத்தத்தில் இவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியதாகவே அமையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிங்கள் சார்பான நிலைப்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்களின் முன்னிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கை முஸ்லிங்களின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இதைவிட பொருத்தமான தருணம் அமைவது சாத்தியமற்றது.
எனவே, இலங்கை முஸ்லிங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைந்தோ தனித்தனியாகவோ,
"இலங்கை முஸ்லிங்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும்; வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய முஸ்லிங்களின் நிலைப்பாடுகளையும்; மத நல்லிணக்க நிலைப்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்றும்; " ....etc முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்களின் முன்னிலையில் நல்லாட்சி அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
ஏனென்றால் அரசியல் அமைப்பு திருத்தத்தில் சர்வேதேசத்தின் தலையீடு அதிகமாக காணப்படுவதாக பல்வேறுபட்ட தகவல்கள் நாளாந்தம் வெளிவந்து கொண்டு இருப்பதோடு ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்களின் வருகையின் பிரதான பாத்திரமாக அதுவே காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
எது எவ்வாறாயினும், முஸ்லிம்களாகிய நாம் இப்படியா சந்தர்ப்பங்களை கைநழுவி விட கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் எல்லாம் முடிந்த பிறகு வந்து சுயநலத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் முஸ்லிம் உரிமைகள் என்றும் அபிலாசைகள் என்றும் அரசியல் ராஜதந்திரம் என்றும் மேடைகளிலும் ஊடங்களிலும் சமூக வலைத்தங்களிலும் கோஷம்போடுவதை கண்டு இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை தெளிவாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW