கொள்ளையர்களை மோப்ப நாயிடம் சிக்க வைத்த கைபேசி முள்ளிநியூஸ்

கொள்ளையர்களை மோப்ப நாயிடம் சிக்க வைத்த கைபேசி



வட்டவளை - ரொசல்ல பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில், 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியோடு இவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (01) இரவு ஆசிரியர் மற்றும் அவரின் மனைவி வீட்டை விட்டு வெளியில் சென்ற வேளையில், அங்கு வந்த இனந்தெரியாத சிலர் மின்சாரத்தை துண்டித்து விட்டு, தந்திரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்


இதன்போது குறித்த வீட்டில் முதியவர் ஒருவர் மட்டும் இருந்ததாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேற்று (02) காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் பொலிஸார் மோப்ப நாய்களை ஸ்தலத்திற்கு கொண்டு சென்று விசாரணையை மேற்கொண்ட போது, அந்த மோப்ப நாய்கள் கொள்ளையர்களால் விட்டு செல்லப்பட்ட கைபேசியின் பின்புற மூடியை மோப்பம் பிடித்தன.

பின் குறித்த மோப்ப நாய்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த, அந்த கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர்களான சந்தேகநபர்களை தாவி பிடித்துள்ளன.

இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் உண்மையான திருட்டு சம்பவம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து குறித்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்படவில்லை.

எனினும் 70,000 ரூபாய் பணமும், ஒரு கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW