பொது அறிவு வினாத்தாளை இரத்துச் செய்க: இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாள் அறிவித்தலுக்கு மாற்றமாக இருந்ததால் அதனை இரத்துச் செய்து பதில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2016.10.22ஆம் திகதி கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாள் விண்ணப்பம் கோரப்பட்ட போது விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு மாற்றமாக நடத்தப்பட்டுள்ளதாக பலர் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. அந்த அறிவித்தலின் 8.1 ஆம் பந்தியில் இரு வினாத்தாள்களைக் கொண்டதாக இப்பரீட்சை அமையுமென்றும் அதில் ஒன்று ஆசிரியர் துறைக்கு இயைபானää கல்வித்துறை பற்றிய பொது அறிவு வினாத்தாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலுக்கேற்ப பரீட்சார்த்திகள் கல்வித்துறை பற்றிய பொது அறிவுக்கே தங்களைத் தயார் படுத்தியுள்ளனர். எனினும்ää நடத்தப்பட்ட பொது அறிவு பரீட்சை வினாத்தாள் இந்த அறிவித்தலுக்கு முற்றிலும் மாற்றமாக இருந்ததால் தங்களால் சரியாக விடை எழுத முடியாமல் போனதாக பரீட்சார்த்திகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொழிலுக்காக நீண்டகாலம் காத்திருந்த பட்டதாரிகள் இந்த அறிவித்தல் மற்றும் பரீட்சை முரண்பாடு காரணமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
எனவே இந்த விடயத்தில் தங்களது விசேட கவனத்தைச் செலுத்தி அறிவித்தலுக்கு மாற்றமாக நடத்தப்பட்ட இந்தப் பொது அறிவு வினாத்தாள் பரீட்சையை இரத்துச் செய்து பதில் பரீட்சை நடத்த ஆவன செய்யுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது