என்றும் விமர்சனத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடையொழுங்கு – கட்டாயம் வாசிக்கவும்
Izzathun Nisa
Medical Student – Eastern University
“என்றும் விமர்சனத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடையொழுங்கு.”
தொடர் : 01.
வைத்தியசாலையும் எம் பெண்களின் ஆடைகளும்.
ஒவ்வொரு கலாசாரத்தவருக்கும் ஒரு ஆடையொழுங்கு இருப்பதும் அது வெவ்வேறு பரிமாணங்களை எடுப்பதும் திருமண, பண்டிகைக்காலங்களில் அது மிகைத்த அழகுடன் கண்கொள்ளாக் காட்சி தருவதும் இயற்கை.
ஆனால், வைத்தியசாலைக்கென்று ஒரு ஆடையொழுங்கு இருப்பது நேரடியாகப் பேசப்படாவிட்டாலும் மறைமுகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்று.
இதை பல விதங்களில் விளக்கமாக கூறலாம்.
01. அன்றாடம் நடந்தேறும் கிளினிக்களின் போதான ஆடை.
உதாரணத்திற்கு சொல்வதானால், எம் பெண்களில் பலர் தனது நோய் நிலமைக்கு சற்றுமே பொருத்தமல்லாத ஆடையை அணிந்து வருவதும் வைத்தியப் பரிசோதனையின் போது தானும் சங்கடப்பட்டு அடுத்தவர்களையும் சங்கடப்படுத்துவதும் பல தப்பபிப்பிராயங்களை உருவாக்குவதும் தினமும் நடந்தேறும் காட்சிகள். வீட்டில் இருந்து புறப்படும் போதே உடலின் எந்த பாகத்தில் தனக்கு பிரச்சனை என்பதை அறிந்து அதை இலகுவாக வைத்தியருக்கு வெளிக்காட்டும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்வது எந்த பிரச்சனைகளையுமே தோற்றுவிக்கப் போவதில்லை.
சன நெருக்கடி மிகுந்த கிளினிக்களில் நாம் குறித்த உடற்பாகங்களை வெளிக்காட்டுவதற்கும் பொருத்தமற்ற ஆடைகளால் அவதிப்பட்டுக் கொள்வதற்கும் எடுக்கும் நேரத்தை வைத்தியரோ அல்லது தாதியோ எல்லா நேரங்களிலும் பொறுத்துக் கொள்வார்கள் என்பது எதிர்பார்க்க முடியாதது. கழுத்து, மார்பு, வயிறு, கை , கால், பிறப்புறுப்பு என தமது நோய்க்கு தேவையான பகுதிகளை வெளிக்காட்டக்கூடியதாய் இலகுவாய் அவசரமாய் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோமேயானால் முகஞ்சுழிப்புகள் இன்றி பரிசோதனைகளை முடித்து விடலாம்.
02. கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை.
இது எந்த மேலதிக விளக்கங்களுமன்றி பொதுவாகவே நேரடியாக வயிற்றை பரிசோதிப்பதும் குழந்தை வளர்ச்சியை மதிப்பிடுவதும் TAS/ TVS போன்ற scan களை செய்வதுமே ஒவ்வொரு தடவையும் இடம்பெறும். ஆக, மிக இலகுவான பொருத்தமான ஆடைகளை அணிவதென்பது இக்காலத்தில் அவசியமாகிறது. சொல்லப் போனால், சல்வார், skirt and blouse களை விட எளிமையான அபாயா மிகப் பொருத்தமாக அவதானிக்கக் கூடிய ஒரு இடம் இது. இலகுவான ஜீன்ஸ்களை உள்ளணிந்து வெளியில் இந்த அபாயாக்களுடன் வரும் சகோதரிகள் இலகுவாகவும் விரைவாகவும் வயிறுகளை வெளிக்காட்டவும் திருப்தியுடன் சோதனையை முடித்துச் செல்லவும் வசதியாக இருப்பது நான் அவதானித்த ஒன்று.
03. வைத்தியசாலைக்கென்று பொதுவான ஆடையொழுங்கு.
பொதுவாக மக்கள சேரும் இடங்களில் நாம் எமது அந்தஸ்துகளை வெளித்தோற்றங்களில் காட்ட முனைவோம். ஆனால், அதற்கு வைத்தியசாலை என்பது பொருத்தமற்ற இடம். ஏனெனில் வைத்தியசாலையின் ஒவ்வொரு ward களிலும், ஒவ்வொரு bench களிலும் அம்ர்ந்திருப்பவர் பெரும்பாலும் ஏதோ ஒரு தீரா நோயாலும், அல்லது பொருளாதார கஷ்டத்தினாலும், அல்லது வைத்தியரிடமிருந்து வந்த எதிர்பாரா அறிக்கைகளினாலும் அழுதுகொண்டும், அவஸ்தைப்பட்டுக் கொண்டும், யோசித்துக் கொண்டும் இருக்கின்ற ஒரு இடம். ஆக இப்படியானவர்களை தரிசிப்பதற்கென்று ஒரு நாகரிகம் இருக்கின்றது. அலுமாரியில் உள்ள அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டோ அல்லது திருமண காலங்களில் அணியும் ஆடைகளை அணிந்து செல்வதோ பொதுவாக ஏனையோரை முகம்சுழிக்க வைக்கும். மிக எளிமையாக நாகரிகமாக இடத்திற்குப் பொருத்தமான ஆடைகளை அணிவது சிறந்தது.
04. கறுப்பு அபாயாக்களும் வைத்தியசாலையும்.
கறுப்பு அபாயாக்களை வைத்தியசாலையினுள் அணிவது கூடாது என்று எந்த நிர்ப்பந்தங்களும் இல்லை. அதே போன்று கறுப்பைத்தான் முஸ்லிம் பெண்கள் அணிய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இஸ்லாத்தில் இல்லை. எங்களில் சில தீவிரப் போக்குடையவர்களால் கறுப்பு, பெண்கள் மீது கட்டாயமாக்கப்பட்டுள்ள அதே நேரம், ஏனைய கலாசாரத்தை சேர்ந்தவர்களால் கறுப்பை துர்சகுணமாகவும், துக்கமாகவும் பார்க்கின்ற ஒழுங்கும் இருக்கின்றது. ஆக, இவ்விரு தரப்பாரும் வைத்தியசாலைகளின் குறிப்பிட்ட சில ward களில் சந்தித்துக் கொள்ளும் போது அது முரண்பாட்டை தோற்றுவிக்கிறது.
இந்த இடத்தில் கறுப்பு பொருத்தமில்லை அத்தோடு என் மார்க்கத்தில் அது நிர்ப்பந்திக்கப்படவும் இல்லை என நாங்களோ, அவரவர் ஆடைத்தேர்வு அவரவரது உரிமை அதற்காய் அவர்களோடு கடினமாய் நடந்து கொள்வது பொருத்தமானதல்ல என அவர்களோ உணர்ந்து கொள்ளாமல் விடுவதும் விட்டதும் தேவையற்ற பல குழப்பங்களை இனங்களிடையே தோன்றவும் மனக்கசப்புகளை தவறான புரிதல்களை வதந்திகளை ஏற்படுத்திவிடவும் காரணமாய் அமைந்தது.
ஆனால் இன்று பல சகோதரிகளால் பொருத்தமான ஆடையொழுங்கு பேணப்படுவதன் மூலம் இத்தகைய முரண்பாடுகள் மிகச் சாதுரியமாய் வெற்றிகரமாய் மார்க்கத்திற்கு கொஞ்சமுமே முரண்பாடில்லாது நகர்த்தப்படுவதும் அவதானிக்க கூடியதே.
ஆக, எங்கள் ஆடையொழுங்கின் அடிப்படை இறைவன் புறத்தாலானது என்பதால் அது உலகம் அழியும் வரை அடுத்தவர்களால் எந்த வகையிலாவது விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனாலும் எது இறைவன் வலியுறுத்தியது , எது மார்க்கம் என்ற பெயரால் போலியாக எம் மீது திணிக்கப்பட்டது என்பதை தெளிவுற அடையாளம் காணலும் எந்த சங்கடங்களும் இன்றி சிரமங்களும் இன்றி அனைத்து இடத்திற்கும் பொருத்தமான ஆடையொழுங்குகளை அணிவதும் மாத்திரமே எம் மீதான கடமையாகிறது.
நாங்கள் எங்கள் ஆடையொழுங்கின் இலகுத்தன்மையை விளங்கி, அதை சில தீவிரப்போக்குடையவர்களின் ஆடையொழுங்கில் இருந்து பிரித்தறிந்து, பொதுத்தளத்தில் அடுத்தவர்களது பார்வையையும் நகைப்பையும் தவிர்ந்து கொள்ளும் வகையில் நடந்து கொண்டு அதையும் தாண்டிய சில அசட்டைகளை கருத்திற் கொள்ளாது நாம் நாமாக இறைவனின் அவன் தூதரின் வழிகாட்டலை மாத்திரம் தெளிவாக பின் தொடருவோமாயின்…
இன்று எம் ஆடையொழுங்கை பிரச்சனையாய் காட்டி,
நாம் அடிமைப்பட்டிருப்பதாய் போலிக் கண்ணீர் சிந்தி,
எம் ஆடையொழுங்கை விமர்சித்து,
எம்மில் பலரை அதை விட்டும் விரண்டோடச் செய்து,
அதன் மூலமாக தம் வயிற்றுப்பிழைப்பு நடத்தும் போலி சுதந்திரவாதிகளையும் சில போலி பெண்ணியல்வாதிகளையும், இவ்வாறான உணர்வு பூர்வமான விடயங்களை சாணக்கியமாய் காய் நகர்த்தும் சந்தர்ப்ப அரசியல்வாதிகள் அல்லது தலைவர்களையும், இனவாதிகளையும் கண்டறிவதென்பதும் அவர்களுக்கான பதில்களாய் நாமே இருப்பதென்பதும் இலகுவாய்ப் போகும்.
அத்துமீறிய பிற்போக்குத்தனமான தீவிரப்போக்குமல்லாது, அனாகரிகமான ஆடையவிழ்ப்புமல்லாது, பொருத்தமான ஆடையொழுங்கை எமக்காய் காட்டித்தந்த அந்த இறைவன் மிக நுண்ணறிவாளன்.மிக்க ஞானமுடையவன்.!