மோடி ஒரு 'போர் விரும்பி': திக்விஜய் சிங் விமர்சனம் முள்ளிநியூஸ்

மோடி ஒரு 'போர் விரும்பி': திக்விஜய் சிங் விமர்சனம்


காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

"பிரதமர் மோடி ஒரு 'போர் விரும்பி'. பாகிஸ்தானுடன் போர் பதற்றச் சூழலை அவர் உருவாக்கியிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் விமர்சித்திருக்கிறார்.

எல்லையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் முகாமை அழித்தது. உரியில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் பரவலாக ஆதரவு தெரிவித்தாலும் தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றன. இந்தியா - பாகிஸ்தானிடம் போர் பதற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தனத்ய் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி ஒரு 'போர் விரும்பி'. பாகிஸ்தானுடன் போர் பதற்றச் சூழலை அவர் உருவாக்கியிருக்கிறார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்றால் இதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் இவ்வாறு போர் பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யே பலம் பெறும்.

அணு ஆயுத சக்தி கொண்ட இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அதை தாக்குப்பிடிக்க முடியுமா? இரு நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போர் பதற்ற அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் போரிட வேண்டியது பசிப் பிணியையும், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் எதிர்த்துதானே தவிர தங்களுக்குள் போரிடத் தேவையில்லை" என்று திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW