ஜனாதிபதி தலையீடு; முஸ்லிம் தனியார் சட்ட சர்ச்சைக்குத் தீர்வு? முள்ளிநியூஸ்

ஜனாதிபதி தலையீடு; முஸ்லிம் தனியார் சட்ட சர்ச்சைக்குத் தீர்வு?


முஸ்லிம் தனியார் சட்டத்தில், குறிப்பாக பெண்களின் திருமண வயது விடயத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என அண்மையில் நீதியமைச்சர் தெரிவித்திருந்தன் பின்னணியில் இரு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு ஜனாதிபதியின் தலையீட்டில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்விவகாரம் குறித்து அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்சவும் சாகல ரத்நாயக்கவும் தெரிவித்திருந்த கருத்துக்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்ததன் பின்னணியில் சிவில் சமூக பிரதிநிதிகள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் நடாத்தியதைத் தொடர்ந்து இது குறித்து நேற்று முன் தினம் ஜனாதிபதியுடன் உரையாடியதாகவும் விபரத்தைத் தெளிவாகக் கேட்ட ஜனாதிபதி, அமைச்சு மட்டத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஜனாதிபதி இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் குரலுடனான நேர்காணலின் போதே நேற்று மாலை இவ்வாறு தெரிவித்த அவர், இப்பிரச்சினை தொடர்பாக ஏலவே முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மார்சுப் தலைமையிலான குழு கடந்த ஏழு வருடங்களாக இவ்விடயம் தொடர்பான பல கட்ட ஆய்வுகள் செய்து எதிர்வரும் 20ம் திகதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அமைச்சர்கள் புதிதாக குழுவொன்றை நியமிக்க முனைந்ததன் பின்னணியிலேயே சர்ச்சை உருவானதாகவும் ஏழு வருடங்களுக்கு முன்பாக அமைச்சரவைத் தீர்மானத்திற்கிணங்கவே குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியதோடு பெரும்பாலும் 20ம் திகதியளவில் சலீம் மார்சுபின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அதுவே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், திருமண வயது தொடர்பிலான விடயத்தில் சட்டத்தரணிகள், சிவில் சமூக முக்கியஸ்தர்கள் உட்பட அனைவரும் கலந்தாலோசித்ததன் பின்னணியில் சலீம் மார்சுபுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் சந்திப்பொன்றை நடாத்தி அவரது அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதோடு சிறு மாற்றங்களைப் பரிந்துரை செய்துள்ளதாகவும இதனடிப்படையில் பருவ வயதையடைந்த பெண் திருமண பந்தத்தில் ஈடுபடலாம் என்பதில் மாற்றம் வரப்போவதில்லை, ஆனாலும் குறைந்த வயதெல்லையை 15 ஆக உயர்த்துவதற்கான முன் மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் மேற்கொண்ட முயற்சியுடன் ஜனாதிபதியின் தலையீடு இவ்விடயத்திற்கு முடிவைக் கொண்டுவரும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW