இரு துறவிகளும் நல்லாட்சியில் சிறுபான்மை சமூகங்களும்

பெரும்பான்மை வாதத் திணிப்புடனேயே அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர இலங்கையில் வாய்ப்புகள் மலர்ந்த போதெல்லாம் சிறுபான்மையினர் மீது பேரினவாதம் பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பெரும்பான்மை சிந்தனைப் போக்கின் விளைவை சிங்களவர்களால் தமிழரும் தமிழர்களால் முஸ்லிம்களும் அனுபவித்துத் துன்பங்களை அனுபவித்து 21ம் நூற்றாண்டில் ஏதோ ஒரு பகுதியில் நிம்மதிப் பெருமூச்சை விடலாம் என்ற நம்பிக்கை தோன்றிய போதும் நிலைக்க மறுத்து வருகிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த போது அனைத்து மக்களுக்கும் தானே ஜனாதிபதியென்றார். ஆனால் அதே மஹிந்த, தான் தோல்வியுற்றதும் வட-கிழக்கில் வாழும் சிறுபான்மையினர் தம்மைத் தோற்கடித்து விட்டார்கள் என்று மாத்திரம் குற்றஞ்சாட்டி பௌத்த காவலன் எனும் சரித்த நாயகனாக மூன்றாவது தடவையும் நிலைப்பதற்காக ஞானசார மூலமாகக் கொண்டு வந்த பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்தினார்.
அவற்றையெல்லாம் சரிசெய்து மைத்ரி அரசு மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழி வகுக்கும் எனும் எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை. சவால் விடுத்துக் கொண்டிருக்கும் சக்திகளும் முழுமையாக அடக்கப்படவில்லை அல்லது அடக்கிக் கொள்ள முடியாத நிலையில் இந்த அரசும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நிர்ப்பந்தப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் வெற்றிகள் மைத்ரி-ரணில் கூட்டரசை ஸ்தீரப்படுத்தியுள்ள போதிலும் மத்திய அரசின் முதுகெலும்பாக செயற்படக்கூடிய உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பறாது அடுத்த நான்கு வருட ஆட்சியை நிம்மதியாகக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலைக் கைதியாகவே இன்றைய தேசிய அரசு செல்கிறது. வியர்வையில் நிம்மதியாக உறங்குபவனுக்கு கனமான போர்வை போர்த்தி விடுவது போல் அவசர அபிவிருத்தித் திட்டங்கள் திணிக்கப் படுகிறதே தவிர அடிப்படையில் மக்கள் கோரும் நிம்மதி பெரும்பான்மை வாதத்தின் அச்சுறுத்தலிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
மஹிந்த ஆட்சியோடு ஒப்பிடும் போது ஓரளவு முன்னேற்றம் இருப்பினும் கூட முழுமையான ‘மாற்றம்’ இன்னும் நிகழவில்லையென்பது துரதிஷ்டமா அல்லது இன்றைய தலைமுறையினர் இன்னும் சில காலங்களுக்குச் சுமக்க வேண்டிய வீண் சுமையா? திணிப்பா? இதுதான் எதிர்காலமா? எனும் கேள்வித் தொடர்கள் உள்ளது.
இந்தக் கேள்விகளுக்கு விடை தரும் நிலையிலோ அது தொடர்பில் அமர்ந்து சிந்திக்கும் அவசியத்திலோ ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைவரும் அமைச்சர்களும் இல்லை. ஆதலால் இதன் முழுப் பொறுப்பும் மைத்ரியின் முடிவுகளில் தங்கியுள்ளது. பலவீனமான கட்சித் தலைவராக இருக்கும் மைத்ரி அதற்கான தீர்வை அதிரடியாக எடுக்க முடியாது திண்டாடுவதால் சிறுபான்மை சமூகங்கள் இன்றும் கடும்போக்குவாத பௌத்த துறவிகளால் தொடர்ந்தும் காயப்பட்டு வருகின்றனர்.
இதற்கான தீர்வு எங்கிருந்து வரப்போகிறது? 30 வருடமாக விடிவு தேடிப் போராடிய தமிழ் சமூகத்தில் யாராவது ஒருவரால், கிழக்கு மாகாணத்தில் ஒற்றையாளாக நின்று பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் அம்பிட்டிய சுமனரத்னவுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க முடியாமல் இல்லை. ஆனால் அவர்களது 30 வருட அனுபவம், அடுத்த தலைமுறைக்காக உருவாக்க விரும்பும் நிம்மதியான வாழ்க்கை சூழ்நிலை அவர்களைத் தடுத்து வருகிறது, சுமனரத்னவும் தன் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கிறார்.
ஞானசாரவின் ஆட்டங்கள் முஸ்லிம் சமூகத்தை குறியாகக் கொண்டது. இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறார். முஸ்லிம் சமூகத் தலைமைகளும் மார்க்க அறிஞர்களும் எல்லை தாண்டிய ‘பொறுமை’யுடன் செயற்பட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு தேர்தல் கால சோதனையைத் தாங்க வேண்டிய சூழ்நிலையினால் இவ்விரு துறவிகளாலும் வதைக்கப்படும் சிறுபான்மை சமூகம் இன்னும் எதையெல்லாம் தாங்க வேண்டும் எனும் நியாயமான கேள்வியிருக்கிறது.
சமவுரிமையுள்ள குடிமக்களாக நிம்மதியான வாழ்வுக்கு இன்னும் ஏன் விலை கொடுக்க வேண்டும் எனும் நியாயம் தலை தூக்கி நிற்கிறது. அதிகாரத்தைப் பெற்ற ஜனாதிபதியும் அரசாங்கமும் அதை வைத்துக்கொண்டு இன்னும் ஏன் மந்தகதியில் இயங்குகிறது எனும் கேள்விக்கணை நாளாந்தம் இளைஞர்கள் மனதில் எழுந்து கொண்டேயிருக்கிறது.
ஆனால், மஹிந்தவால் பண பலத்தால் கட்டி உருவாக்கப்பட்ட உள்ளூராட்சிக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய முடியாது திணறும் அரசு கூட்டுறவுத் தேர்தல்களில் கண்ட பின்னடைவையிட்டு ஆடிப்போயிருக்கிறது. அதனால் இன்னும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்துக்கொண்டிருக்கிறது.
‘தெரிவுக்கான’ காரணமின்றி அங்கீகாரம் வழங்கும் தேவையைற்றவர்களாகவே வாக்காளப் பெருமக்கள் வாழப்பழகியுள்ளதால் இப்படியொரு ஆபத்தைக் கடக்க இன்றைய ஆட்சியை ஸ்திரப்படுத்த வேண்டும் எனும் தெரிவு மக்களுக்கும் காண்பிக்கப்படும் தேவையும் தொடர்கிறது.
எத்தனை காலம் இந்நிலை தொடரப் போகிறது என்பதே இன்றைய கேள்வி!
-அ.நவாஸ்