கடன்சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் வரவு செலவுத்திட்டம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி முள்ளிநியூஸ்

கடன்சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் வரவு செலவுத்திட்டம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி



(இஹ்ஸானா -பரீத்)
இந்த வரவு செலவுத்திட்டம் நாட்டை மீட்டெடுக்கின்றன வரவு செலவுத்திட்டமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் நாடு பெருங் கடன் சுமையில் இருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் கடந்த புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
வருகின்ற சந்ததிகளுக்கு கடன் சுமையில்லாத முன்னேற்றம் கண்ட ஒரு நாட்டைக் கையளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. இதனை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தான் இது.
கடன் சுமையுள்ள ஒரு குடும்பத்தினால் அத்தியாவசியத் தேவைக்கு மேலதிகமாக எந்த செலவும் செய்ய முடியாத ஒரு நிலை காணப்படும். அதற்காக பொறுமையுடன் வாழ வேண்டிய ஒரு கட்டம் அக்குடும்பத்திற்கு எற்படும். அதேபோல தான் நமது நாட்டின் தற்போதைய நிலையும்.
கடந்த அரசுத் தலைவர்கள் அவர்களது சுகபோகத்தை மையமாக வைத்து பெற்ற கடன் சுமையில் நாடு இப்போது சிக்கித்தவிக்கின்றது. எனவே, பொதுமக்கள் அளவுக்கதிமான வரப்பிரசாதங்களை எதிர்பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
இருந்த போதிலும் கடனையும் மீளச் செலுத்த வேண்டும். நாட்டு மக்களையும் போசித்துப் பாதுகாக்க வேண்டும் என்ற இரு கடப்பாடுகள் அரசுக்கு உள்ளது. இந்த இரு கடப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த வரவு செலவுத்திட்டம். இதில் மக்களுக்கு நன்மை தரும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கௌரவ அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் மிகுந்த பிரயத்தனம் எடுத்து தயாரித்த வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்நாட்டுப் பால்மா, சீனி, சமையல் எரி வாயு, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. பயறு, உருளைக்கிழங்கு, பருப்பு, நெத்தலி போன்ற உணவுப் பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்புகளின் பிரதிபலன் நேரடியாக சமையலறையில் தெரிந்து விடும். இதன் மூலம் சாதாரண குடும்பங்கள் மிக அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன.
இன்று நாட்டிலே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பணக்காரர் பாமரர் என்ற வித்தியாசமின்றி சகலரையும் இந்நோய் பீடித்து வருகின்றது. இந்நோயைக் கட்டுப் படுத்த அதிமேதகு ஜனாதிபதி அவர்களது தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரவு செலவுத்திட்டத்திலே சிறு நீரக நோயைக் கட்டுப்படுத்த 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நன்மை பாமர மக்களைச் சென்றடையவுள்ளது. இது அவர்களுக்க மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரச ஊழியர்களின் சேவைக்காலத்தில் வழங்கப்படும் அக்ரஹாரா காப்புறுதி திட்டம் இப்போது ஆயுள்காலத்திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அரசுக்காக உழைத்தவர்கள் ஓய்வூதியக் காலத்திலும் இதன் நன்மையை அனுபவிக்கவிருக்கின்றனர். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
உயர்தர வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்க 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்களான மாணவர்கள் மீது இந்த அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகின்றது. இது தகவல் தொழில்நுட்ப யுகம். எனவே, எமது மாணவர்கள் இந்த யுகத்திலே உள்ள சகல சவால்களுக்கும் முகங்கொடுத்து முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுள் ஏறத்தாழ 20 வீதமானவர்களே இப்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். இதனால் உயர்தரம் சித்தியடைந்த பலர் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க இந்த வரவு செலவுத்திட்டத்திலே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையை கட்டங் கட்டமாக 50 ஆயிரமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இன்று நாம் எதிர்கொள்ளும் பாரிய சவால்களுள் ஒன்று அதிகரித்து வரும் திண்மக் கழிவுகளாகும். சுற்றாடல் அமைச்சராக இருக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இதனை வெற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அதற்கு வலுச் சேர்ப்பதற்காக திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு வரிச் சலுகை முன்மொழியப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புதற்கான முன்மொழிவுள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
வடக்கு கிழக்கு நல்லிணக்கத்திற்கென 180 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தபால் வலையமைப்பை மேம்படுத்த 10 மில்லியன் ரூபா முன்மொழியப் பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிமன்ற உள்சார் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்க 300 மில்லியன் ரூபா பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலை, பாசிக்குடா, அருகம்குடா என்பவற்றை உள்ளடக்கி சுற்றுலா பொருளாதார மையம் அமைக்கப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அனைத்தும் மிகவும் வரவேற்கத்தக்கவை.
ஆக நாடு இக்கட்டான சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வரவு செலவுத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. கட்சி பேதங்களுக்கு அப்பால் நடு நிலையாக நின்று அவதானிப்போர் இதனை ஏற்றுக்கொள்வர்.
எனவே. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இதற்கு ஆதரவு அளிப்பர் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW