27 MPகளுக்கு எதிராக முறைப்பாடு..!
தற்போது பதவியிலுள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அரசு தீர்வையின்றி வழங்கிய வாகனங்களை வெளியாருக்கு உரிமை மாற்றம் செய்து சட்டவிரோதமாகப் பணம் தேடியிருப்பது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்டிருக்கும் இந்த முறைப்பாடுகளைத் துரிதமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரும் மனுவொன்றை சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவும், அதன் அதிகாரிகளும், பிரதி நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 85 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தீர்வையற்ற வாகனங்களை வழங்குவதன் நோக்கம் அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
எனினும், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்று பணம் தேடிக்கொண்டுள்ளார்கள். இதனால் அரசுக்கும் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதச்செயல் பற்றி இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு 2014ஆம் ஆண்டு செய்த முறைப்பாடுகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை.
இவ்வாறு மோசடி செய்துள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு தனக்குக் கிடைத்திருக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்து தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவேண்டுமென மனுதாரர் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.