அமைச்சர் விஜேதாச விஜயம்: சுமனரத்ன தேரர் ‘திருப்தி’!
கடந்த மூன்றாம் திகதி கலவரத்தைத் தூண்டும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கி பொது பல சேனா பேரணியாக மட்டக்களப்பு வருவதை எதிர்பார்த்து இனவாத முறுகலைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், நேற்றைய தினம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அங்கு விஜயம் செய்திருந்தமை தொடர்பில் பூரண திருப்தியை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் சிங்கள மக்கள் மற்றும் பௌத்தசாசன விவகாரங்களில் தாம் தனித்திருப்பதாகவும் அவை தொடர்பில் இருக்கும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசின் தலையீட்டைக் கோரியே தாம் போராடி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், புத்தசாசன அமைச்சர் அங்கு விஜயம் செய்ததன் மூலம் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தான் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவின் கையாளாக இயங்கவோ தமிழ் – முஸ்லிம் மக்களோடு முறுகலை ஏற்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பொதுபலசேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார, அம்பிட்டியே சுமனரத்ன தேரரினால் விகாரை நிலங்கள் என சுட்டிக்காட்டப்படும் இடங்களைச் சென்று பார்வையிட்டிருப்பதுடன் அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக அவற்றிற்குத் தீர்வைப் பெற முயற்சிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விவகாரங்கள் தொடர்பில் அரசு கவனமெடுக்கும் என அமைச்சர் விஜேதாச தெரிவித்துள்ள அதேவேளை அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.