'வார்தா' புயல்: சென்னையில் ரயில், விமான சேவை முடக்கம்
வார்தா புயல் காரணமாக பலத்த காற்று, கனமழை முதலான மிக மோசமான வானிலையின் எதிரொலியாக, சென்னையில் ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையம் மூடப்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை காலையில் இருந்தே பலத்த காற்றும் கனமழையும் நீடித்தவண்ணம் இருந்தது. இதனால், நகர் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
விமான நிலையம் மூடல்:
புயல் எதிரொலியாக, சென்னை விமான் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல்,
சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை புறநகர் பகுதியில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து. அதன்படி, சென்னை சென்ட்ரல் – வேளச்சேரி, தாம்பரம் - மெரினா ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சென்னை மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என காலையில் அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள - வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான அவசர உதவி எண்கள்
தொலைபேசி எண்கள்:
044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570
வாட்ஸ் அப் எண்கள்:
94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207