‘வர்தா’ புயல் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது: பலத்த மழை எச்சரிக்கை முள்ளிநியூஸ்

‘வர்தா’ புயல் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது: பலத்த மழை எச்சரிக்கை


வர்தா புயல் நாளை கரையை கடப்பதால் இன்று மாலையில் இருந்தே வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும். இதேபோல் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

கடந்த 8-ந்தேதி இது புயலாக உருவானது. இந்த புயலுக்கு வர்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.

வர்தா புயலானது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி இந்த புயல் சென்னைக்கு கிழக்கே 660 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென் கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

அதி தீவிர புயலான வர்தா தற்போது சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.நெல்லூரில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிப் பட்டினத்தில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த புயலானது தெற்கு ஆந்திரா- சென்னை இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது.

புயல் கரையை கடக்கும் போது சென்னை உள்பட தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலையில் இருந்தே வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும். இதேபோல் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளிலும், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளிலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாக கடந்த அக்டோபர் 30-ந்தேதி தொடங்கியது. பருவ மழை 90 முதல் 100 சதவீதம் வரை பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 70 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது.

நவம்பர் 30-ந்தேதி உருவான நாடா புயல் வலு விழந்து போதிய மழையை தரவில்லை. தற்போது அதி தீவிரமாக மாறியுள்ள வர்தா புயல் அதிகமான மழையை பெற்று தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW