: மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்படுவோருடன் அரசு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் பாராளுமன்றத்தில் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

(இஹ்ஸானா- பரீத்)
மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்படுவோருடன் அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமே அவர்களது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பாரிய வைத்தியர் தட்டுப்பாட்டை நீக்க அங்கு வைத்தியர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால் நியமிக்கப்படுவோர் அனைவரும் அங்கு வந்து சேர்வதில்லை. சிறிய எண்ணிக்கையானோரே வருகின்றனர்.
ஏனையோர் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று விடுகின்றனர். சிலர் வேலையை விட்டுவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்கும்ää வெளிநாடுகளுக்கும் சென்று விடுகின்றனர். இதனால் திருகோணமலை மாவட்டத்தின் வைத்தியர் பற்றாக்குறையைப் போக்க முடியவில்லை.
கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் பயிலுனர் ஆசிரியர்கள் கற்கை நெறியின் பின்னர் குறித்த காலம் இலங்கையில் பணிபுரிவேன் என்று உறுதி பூணும் ஒப்பந்தம் செய்து கொள்வதைப்போல மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்படுவோருக்கும் ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும்.
அப்போது தான் அரச பல்கலைக்கழகங்களில் இலவசமாக கற்கும் வைத்தியர்களின் சேவையைப் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் வைத்தியர் தட்டுப்பாட்டை போக்க முடியும். இந்த விடயம் குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
> > இதேபோல நியமிக்கப் படுகின்ற மருந்தாளர்கள் தாதி உத்தியோகத்தர்கள் போன்றோரும் திருகோணமலை மாவட்டத்திற்கு வந்து சேர்வதில்லை. இடமாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். இவை அனைத்திற்கும் பரிகாரம் காண வேண்டும். பொதுவான ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு வைத்தியசாலைகள் மட்டுமே தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலை கந்தளாய் ஆதார வைத்தியசாலை என்பன அவையாகும்.
இந்த வகையில் கிண்ணியா தள வைத்தியசாலையையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் கடந்த சுனாமி காலத்தில் முற்றாக அழிந்த வைத்தியசாலை கிண்ணியா ஆதார வைத்தியசாலையாகும். இதனால் சொந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.
கிண்ணியா தள வைத்தியசாலை சுனாமிக்குப் பின்னர் வேறு இடத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ளதால் அங்கு அதிகமான பௌதீக மற்றும் ஆளணித் தேவைகள் காணப்படுகின்றன. மாகாண சபையின் ஆளணிவளம் மற்றும் நிதி நிலமைகளுக்குள் அத்தனை தேவைகளையும் நிவர்த்தி செய்வதென்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கின்றது. எனவே தான் இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து விசேட திட்டத்தின் கீழ் இதனை அபிவிருத்தி செய்;ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மூதூர் தள வைத்தியசாலை ஈச்சிலம்பற்று வரையான மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வைத்தியசாலையாகும். இங்கும் பல்வேறு தேவைகள் உள்ளன. இவை அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும்.
புல்மோட்டை தள வைத்தியசாலையில் பல்வேறு தேவைகள் உள்ளன. இவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் சம்பூரில் புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகின்றது. இது வரவேற்கப்படக் கூடிய விடயமாகும்.
கச்சக்கொடித்தீவு வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டும். இதன் மூலம் கிண்ணியா வைத்தியசாலையின் நெருக்கடியைக் குறைக்க முடியும்.
சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் சேவைகள் குறித்து பொதுமக்கள அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அர்ப்பணிப்புடன் செயற்படும் வைத்தியர்களின் சேவைகள் கூட மதிக்கப்படாத சூழ்நிலை காணப்படுகின்றது. இது கவலைக்குரியது. இது போக்கப்பட வேண்டும். வைத்தியசேவை மதிக்கப்பட வேண்டும். எனவே. கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து தவறு விடும் வைத்தியர்களை நெறிப்படுத்தி பொதுமக்களின் திருப்தியைப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.