மியன்மாரில் உச்சக்கட்டம்: இலங்கையில் ஆரம்பக் கட்டம்! முள்ளிநியூஸ்

மியன்மாரில் உச்சக்கட்டம்: இலங்கையில் ஆரம்பக் கட்டம்!


சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவரும் ராணுவ ஆட்சியாளர்களால் பல வருடங்கள் சிறைப்படுத்தப்பட்டவருமான ஆங்சாங் சூகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லையா?

இதுதான் உலகமே மூக்கின் மேல் விரல்விட்டு ஆச்சரியத்தோடு கேட்கிற கேள்வி!

சூகி ராணுவத்தால் முடக்கப்பட்டிருந்த போது முஸ்லிம்களுக்குள் ஒரு நப்பாசை இருந்தது. அவரது விடுதலை தங்களுக்கும் விடுதலையை பெற்றுத்தரும் என்பதே அந்த நப்பாசையாகும்!
ஆனால் அவர் எங்கிருந்த போதும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் காத்துவந்த கள்ள மெளனத்தினை பலர் கவனிக்க தவறியிருந்தனர்.

கடந்த மியன்மார் தேர்தலின் போது கூட சூகி அதிகாரத்திற்கு வந்துவிடவேண்டுமென பிரார்த்தனை செய்த ஏராளமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
அவரது கட்சியே வெற்றிபெற்றது!

தனக்கு ஒரு காலத்தில் சாரதியாக பணியாற்றியவரை நாட்டின் தலைவராக பணிக்கமர்த்தி இப்போது அவரை ரிமோட் கொன்ட்ரோலில் இயக்கும் ஆட்சியினை சூகி செய்து வருகிறார்.
சூகி ஆட்சிக்கு வந்த பிறகு ரோஹிங்கிய மக்கள் மீதான கொடுமைகள் இன்னும் வலுத்தன!

ரோஹிங்கிய மக்களின் வாழ்வுரிமையினை சூகியும் மறுத்ததே உலகை ஆச்சரியத்தில் உறையவைத்தது!
அவரது சமாதானத்திற்கான நோபல் பரிசினை பறிக்கச்சொல்லி உலகமெங்கும் கையெழுத்து வேட்டை ஆரம்பமானது!

சர்வதேச செய்திச்சேவையொன்றிற்காக அவரிடம் பேட்டி காணப்பட்ட போது ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய சூகி , ஈற்றில் “பேட்டி காண்பவர் முஸ்லிம் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கமாட்டேன்” என இடையில் நழுவிச்சென்றார்!

இப்போது மியன்மாரில் படுகொலைகள் கட்டுக்கடங்காமல் தொடர்கின்றன…..
அந்த கொடூரத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை!

இப்போது இலங்கைக்கு வருவோம்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் மியன்மாரின் விராதுவிடம் பயிற்சியும் ஆசியும் பெற்றுக்கொண்ட பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன, வணிக நிலையங்கள் எரியூட்டப்பட்டன, தர்கா நகரமே எரிக்கப்பட்டது, இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டன, பலர் காயப்பட்டனர் இது போல் இன்னும் பல அவலங்களை இலங்கை முஸ்லிம் சமூகம் சந்தித்தது.

அதன் பிறகு மஹிந்த அரசின் அனுசரணையில் மியன்மாரை விட்டே அதுவரை வெளியாகாத பயங்கரவாதி, 969 இயக்கத்தின் தலைவன் விராது இலங்கைக்கு வந்து முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்தை செய்து விட்டு போனான்.

இதன் பிறகுதான் தேர்தலொன்று வந்தது.
முஸ்லிம் மக்கள் தங்களுக்கு விடிவு கிட்டும் என நம்பி மைத்ரிபாலவுக்கு வாக்குகளை அள்ளிவழங்கினார்கள்.

பொது பல சேனாவும், ஏனைய இனவாத செயற்பாடுகளும் துடைத்தெறியப்படுமென மலை போல நம்பினார்கள்.
இப்படித்தான் மியன்மார் முஸ்லிம் மக்களும் சூகியை நம்பினார்கள்.

இங்கே நடந்தது என்ன?
விபரிக்கவேண்டிய அவசியமில்லை.
முன்னைய ஆட்சியை விட இனவாத செயற்பாடுகளும், நெருக்குவாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளை சிங்கள பெளத்த அப்பாவி மக்கள் மத்தியில் இனவாதிகள் செய்து கொண்டு வருகிறார்கள்.
அரசுக்கும் இது பற்றி நன்கு தெரிந்தும் சட்டத்தை அமுல்படுத்தி கயவர்களை கூட்டிலடைக்காமல் மறைமுகமாக அவர்களை போஷித்து வருகிற செயற்பாடுகளை நாட்டின் உயர் சபையான பாராளுமன்றம் வரை காணமுடிகிறது.

மஹிந்த காலத்து தாக்குதல் பாணியிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு வேறொரு வகையான பெருந்தாக்குதல் ஒன்றிற்கு இந்த இனவாத சக்திகள் தயாராவது புலனாகிறது.
முஸ்லிம் சமூகம் இருதலைக்கொல்லி எறும்பு நிலைக்கு வந்துவிட்டது.

என்ன காரணத்திற்காக கடந்த அரசை தூக்கி வீச முஸ்லிம் சமூகம் துணை நின்றதோ, இப்போது அதே பிரச்சினைக்குள் மீண்டும் இந்த சமூகம் தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

அனைத்து பின்புலங்களையும் ஒப்பிட்டு நோக்கினால் இலங்கையிலும், மியன்மாரிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து ஒரே வகையான மறைமுக சக்தியே செயற்படுகிறது.
அந்த சக்தி ஒரு சர்வதேச சதி என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது.

இந்த சதி வலைக்குள் சிக்கியிருக்கும் இருநாடுகளின் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இந்த இனவாதிகளை தங்களது அரசியலுக்கு வாசியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு இவ்விரு நாட்டு அரசுகளும் முஸ்லிம்களை இரையாக்க துணிந்துவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

மியன்மாரில் அது உச்ச கட்டத்தை அடைந்து விட்டது!
இலங்கையில் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது!
ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது!
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW