தேசிய அரசை உருவாக்கியது, தேங்காய் துருவுவதற்கு அல்ல – மனோ கணேசன் முள்ளிநியூஸ்

தேசிய அரசை உருவாக்கியது, தேங்காய் துருவுவதற்கு அல்ல – மனோ கணேசன்



நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்படுகின்ற தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து தேசிய அரசாங்கத்தினையும் அமைத்தோம். எனவே அரசாங்கத்தின் உள்ளிருந்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் பிரிந்து செல்லலாம் என்று தமிழ் முற்போக் குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், நல்லிணக்கம் மற் றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாம் இந்த தேசிய அரசை உருவாக்கியது, தேங்காய் துருவுவதற்கு அல்ல; அரசியலில் விளையாடவும் அல்ல. இந்த நாட்டில் புரையோடிபோயுள்ள தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவே தேசிய அரசை உருவாக்கினோம் என்பதை டிலான் பெரேரா, எஸ்.பி. திஸாநாய க்க போன்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச் சர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு , அதன் பிறகு அவசியமானால், நாம் வெவ்வேறு திசைகளில் விலகி செல்வோம். முடியுமானால், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசை அமைக்கட்டும். ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் தங்கள் தலைமையிலான அரசை அமைக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய முடிவை அப்போது எடுக்கும். அல்லது புதிய பொது தேர்தலுக்கே செல்வோம். நாம் எதற்கும் தயார். ஆனால் இப்போது தேசிய அரசு நீடிக்க வேண்டும். அதை உடைத்து மஹிந்தவுக்கு உதவிசெய்து டீல் டிலான் ஆக வேண்டாம் என நண்பர் டிலான் பெரேராவை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் ,தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஜனவரி 8ம் திகதி நாம் பெற்றுக்கொண்ட வெற்றியை மறுபக்கம் திருப்பும் முயற்சியில் குழுவொன்று மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. அந்த குழு அரசாங்கத்தின் உள்ளேயே செயற்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது.

சுதந்திர கட்சியில் சிலர் இவ்வாறு செயற்படுவதானது ஏற்றுகொள்ள கூடிய விடயமல்ல. இவ்வாறு யார் செயற்படுகின்றார்கள் என்று பார்க்கின்ற போது அவர்கள் கடந்தவருடம் ஜனவரி 8ம் திகதி புரட்சியின் போது எதிர்தரப்பில் அமர்ந்திருந்தவர்களாகவே உள்ளனர்.

தற்போது அவர்களுக்கு எமது ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மீது அதீத பற்று ஏற்றுபட்டுவிட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு தவறான உபதேசங்களை வழங்கி அவரை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.அவரை வீழத்துவது கடினமான செயல் இருப்பினும் நாம் இதுகுறித்து பேச வேண்டியது அவசியமகும்.

காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு வித்திட்டது. கடந்த தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக 100 க்கு 55.83 வீதமான வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டார். 43.40 வீதத்திலான வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தினை எடுத்துக்கொண்டு பார்க்கையில் நுவரெலியா மாவட்டத்தில் 100 க்கு 63 வீத வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தது. இது தேசிய மட்டத்தில் கிடைத்த வாக்கு வீத்தினை பார்க்கிலும் அதிகமானது.

மத்திய கொழும்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 75.8 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார். எனவே நாம் தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கின்ற போது அதனை பார்க்கிலும் அதிகமான வாக்குவீதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

இவ்வாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிக்கு அதிகபடியான வாக்குகளை பெற்றுக்கொடுத்து வெற்றிபெறச் செய்ததன் பிரதான நோக்கம் இந்நாட்டில் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதாகும்.

வரலாற்றிலும் இவ்வாறான தீர்வினை காண்பதற்கு பல முயற்சிகளை இரு கட்சிகளும் மேற்கொண்டன அந்த சந்தர்ப்பத்தில் மற்றைய கட்சி காலை பிடித்து இழுத்து அந்த முயற்சியை முறியடித்து விடும்.அவ்வாறு நடக்ககூடாது என்பதற்காகவே தற்போது தேசிய அரசாங்கத்தினை உருவாக்கினோம். எனவே முதலில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பின்புதான் மற்ற விடயங்கள் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறான நிலையில் சிலரின் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது. அமைச்சர் டிலான் பெரேரா போன்றவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அமைச்சர்கள் பாவப்பட்டவர்கள் என கூறுகின்றனர்.அவர்களின் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளன. காரணம் பாவப்பட்டவர்கள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்கள் பாவம் பார்த்து வழங்கப்பட்ட அமைச்சுக்களை பெற்றுக்கொண்டவர்களாவர். எமக்கு அவ்வாறான நிலையில்லை.

நாம் மக்கள் பலத்தில் வந்தவர்கள். தற்போது நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து செயற்படுவதற்கான பிரதான நோக்கமும் இதுவாகும். காரணம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதாகும்.

அதற்கமைய உருவாக்கப்பட்டு வருகின்ற அரசிலமைப்பினை சிலர் மரணப்பொறி என்று கூறுகின்றனர். நாட்டை பிரிக்கும் செயற்பாடு என்று கூட்டு எதிரணியின் விமல், உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். நாடு இரண்டாக பிரியாது என்று சகலரும் அறிவர். இருப்பினும் இதனை காட்டி நாட்டினை பிரிப்பதே இவர்களது முயற்சியாகும்.

டிலான் பெரேரா உள்ளிட்டவர்களும் இதனை அறிவர். அரசிலைமைப்பு புத்துருவாக்க குழுவில் அவரும் அமர்ந்துள்ளார். எனவே அவர் நாடு பிளவுபடாது என்றும் பெளத்த மதத்தின் முக்கிய இடம் தகர்க்கப்படாது என்பதையும் அறிவார், அதனை நாட்டிற்கு எடுத்து கூற வேண்டிய கடமை அமைச்சர் டிலானுக்கு உள்ளது.

நாட்டை பிளவுப்படுத்தும் மரணப்பொறியாக புதிய அரசியலமைப்பு இருக்காது என்று கூறுவதற்கு பதிலான டிலான் போன்றவர்கள் கூட்டு எதிரணிக்கு தமது கருத்துக்களை வலுவாக பதிவு செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் நடந்துக்கொள்கின்றனர்.

விமல், கம்மன்பில, ஞானசார தேரர் போன்றவர்களை விமர்சிக்கின்றார்.டிலானுக்குத்தான் டீல்பஷில் ராஜபக்ஷவுடன் ஐ.தே.க.வுக்கு டீல் இருப்பதாக அமைச்சர் டிலான் சொல்லி வருகிறார்.

ஆனால், பார்க்கப்போனால் அவருக்கு தான் அங்கே டீல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. அவர் தான் டீல் டிலானோ என்று கேட்க விரும்பு கிறேன். டிலான் பொதுவாக சிறுபான்மை மக்கள் தொடர்பில் அக்கறை உள்ளவராக தன்னை காட்டிக்கொள்கிறார். அது நல்லது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வைக்கூட அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுவும் நல்லது. ஆனால், நடைமுறையில் புதிய அரசியலமைப்பு வரும்வரைக்கும் கூட இந்த இந்த அரசை விட்டு வைக்க அவர் தயார் இல்லை. இப்போது இருக்கின்ற இந்த அரசும் போய் விட்டால், இனி எந்த அரசாலும் தீர்வு ஒன்றை கொண்டு வரமுடியுமா? அதனால்தான், நாம் இந்த அரசை காப்பாற்ற விளைகிறோம்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட ஐக்கிய தேசிய முன்னணிக்கே பாராளுமன்றத்தில் ஆசனம் அதிகம்.

ஆகவே அவர்களுக்குதான் தனியாக ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், நாம் அதை இப்போது விரும்பவில்லை என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறோம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் ஒற்றாக இருந்தால்தான் அரசியல் சித்து விளையாட்டுகள் நின்று புதிய அரசியலமைப்பு வர வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா போன்றோர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய உங்கள் கட்சி தலைவரை நாம்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளோம். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாம் இந்த புரட்சியை ஏற்படுத்திய போது நீங்கள் வேலியின் அந்த பக்கத்தில் இருந்தீர்கள். இப்போது உள்ளே வந்து திடீர் பாசத்தை ஜனாதிபதியின் மீது பொழிகிறீர்கள். இதை மறந்துவிட வேண்டாம்.

அதனால் இந்த நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரையிலாவது இந்த அரசாங்கம் ஒருமித்த நிலைப்பாட்டில் பயணிக்க வேண்டும். அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு விட்டால் நீங்கள் விலகிச் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ தனித்து ஆட்சிய மைத்துக்கொள்ள முடியும்.

தற்போது நாம் தேசிய கொள்கையுடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இணைந்துள்ளோம். நாம் மக்கள் பலத்தை பெற்ற மக்களை வெற்றி பெறச் செய்தவர்கள் என்பதை டிலான் போன்றவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். (tw)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW