மஹிந்தவின் ‘பொய்’ எடுபடப் போவதில்லை: அசாத்
தான் ஜனாதிபதியாக இருந்த போதில் அளுத்தகமயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி தனக்குத் தெரியாது என்று மஹிந்த ராஜபக்ச தற்போது சொல்லும் பொய்யை யாரும் நம்பப் போவதில்லையென தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.
நேற்றைய தினம் லண்டன் நகரில் பிபிசி நிறுவனத்தில் இடம்பெற்ற நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வேளையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதை அறியவில்லையென தெரிவிக்கும் மஹிந்த, தனது அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்கவே பொது பல சேனாவை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் அப்போதே சம்பிக்க ரணவக்கவுக்க எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய அத்தனை அதிகாரங்களும் கொண்டிருந்த நிலையில் அதனை ஏன் அவர் செய்யவில்லையெனவும் அசாத் சாலி கேள்வியெழுப்பினார்.
ஜெனிவா சென்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத நடவடிக்கைகள் குறித்த ஆவணத்தைக் கையளித்தமை தொடர்பில் பிபிசி செய்தி நிறுவனம் வினவிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பயனாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் மட்டத்திலும் முயற்சி செய்த பின்னரே சிவில் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தான் இவ்வாறு மனி உரிமைகள் பேரவையை நாடியாகதாகவும் நல்லாட்சியை எதிர்பார்த்திருந்த போதிலும் தற்போதைய நடவடிக்கைகள் அதிருப்தியானவையாகவே இருப்பதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று முன்தினம் ஐக்கிய இராச்சியத்தலிருந்து இயங்கும் சர்வதேச தொலைக் காட்சி சேவையான இஸ்லாம் சனலிலும் விசேட நேர்காணல் நிகழ்வொன்றில் அசாத் சாலி மற்றும் எமது பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டு இலங்கை நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.