மரணத்தை விட சிறந்த உபதேசி கிடையாது! முள்ளிநியூஸ்

மரணத்தை விட சிறந்த உபதேசி கிடையாது!


“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.” (ஸுரத்துல் முனாஃபிகூன் 63:9)

ஆடி அடங்கும் அந்தத் தருவாயில் எல்லா வேடங்களும் களைந்து போய் விடும்,

படைத்த றப்பிடம் மீளும் தருணம், நாம் வாழ்ந்த வாழ்க்கை தரும் உண்மையான வேடம் வெளிச்சத்திற்கு வரும் தருணம், நாம் மறுமை வாழ்விற்காக ஈட்டிக் கொண்டவை தவிர அனைத்தையும் விட்டுப் பிரியும் தருணம்.

எல்லோரும், எல்லாமும் அருகில் இருந்தும் எதுவுமே. சொல்ல முடியாமல், செய்ய முடியாமல் தனிமையில் தவிக்கும் மரணத் தருவாயில்…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையொன்றே எஞ்சி நிற்கும் அந்தத் தருவாயில்…

மீண்டும் தவனை கேட்கும் நிலை வராது அவனிடம் ஆவலோடு மீளும் அருள் பாக்கியம் வேண்டும்.

“ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் – நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.” (ஸுரத்துல் முனாஃபிகூன் 63:11)

அஜல் தவணை முடிந்து விட்டால் அவகாசம் கிடையாது, மன்னிப்புக் கோர அவகாசம் கிடையாது, தான தர்மம் செய்ய அவகாசம் கிடையாது, கடன்களை மீளச் செலுத்த அவகாசம் கிடையாது, எங்கோ என்றோ எவருக்கோ இழைத்த அநீதிக்கு நீதி வழங்க அவகாசம் கிடையாது.

“உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.” (ஸுரத்துல் முனாஃபிகூன் 63:10)

படைத்த றப்பின் விடயத்தில் விட்ட தவறுகள் அவனது அடியார்கள், படைப்புக்கள் விடயத்தில் விட்ட தவறுகள் என யாரிடமும் எதனையும் சரி செய்து கொள்ள அவகாசம் கிடையாது.

தனி மனிதர்களுக்கு இழைத்த அநீதிகள், பெற்றோருக்கு, உடன் பிறப்புகளிற்கு, மனைவி மக்களிற்கு செய்த அநியாயங்கள், நோவினைகள் , நிறுவனங்களுக்கு இழைத்த அநீதிகள், சமூகத்திற்கு , தேசத்திற்கு செய்த துரோகங்கள், சுமந்து கொண்ட பொறுப்புகளில் விட்ட தவறுகள், வக்பு சொத்துக்களில் செய்த கையாடல்கள் என எவற்றையும் சரி செய்து கொள்ள அவகாசாம் கிடைப்பதில்லை.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடிய எமது தொழுகைகள், நோன்புகள் ஏனைய வணக்க வழி பாடுகள் , தான தர்மங்கள், நன்மையான காரியங்கள், நற் பணிகள் மாத்திரமே எங்கள் மறுமைக்கான பயணத்தின் கட்டுச் சாதனங்கள், சௌகரியங்கள், அலங்காரங்கள்.

எமது ஒவ்வொரு சொல் செயல் அங்கீகாரங்கள் பொறுப்புக்கள் கடமைகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனின் திருப்தியை நாடி மாத்திரமே மேற்கொள்வோம், நாம் விட்ட தவறுகளை சரி செய்து கொள்வோம், பாவங்களிற்கு மன்னிப்பு தேடிக் கொள்வோம், அமானிதங்களை பேணிக் காப்போம்.

எங்கு எப்பொழுது எவ்வாறு எங்கள் மரணம் நிகழும் என எங்களுக்கு தெரியாது, அழைப்பு வரும் போது அல்லாஹ்வை தரசிப்பதற்கு எப்போதும் தயாராகவே இருப்போம், இன்ஷா அல்லாஹ்.

“அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.” ( ஸுரத்துல் அன்ஆம் 6:60)

எவருக்கேனும் என்னால் குறை குற்றங்கள் நிகழ்ந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், எனது எழுத்துக்கள் பேச்சுக்கள், சமூகப் பணிகள் போன்றவை பயனளித்திருந்தால் அவற்றை அல்லாஹ்வின் திருப்தியை ஈருலகிலும் எனக்கும், உங்களிற்கும், எனது பெற்றோருக்கும், உடன் பிறப்புக்களிற்கும், மனைவி மக்களிற்கும், ஆசான்ககளிற்கும் நிறைவாக பெற்றுத் தரவும், மென்மேலும் இக்லாலாஸ் உடன் நற்கருமங்கள் செய்யவும் துஆ செய்யுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அனைவர் மீதும் கருணை காட்டி நேர் வழி செல்ல கிருபை செய்வானாக.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW