குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அபிவிருத்தி நிறுத்தப்படாது : ஜனாதிபதி முள்ளிநியூஸ்

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அபிவிருத்தி நிறுத்தப்படாது : ஜனாதிபதி


அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கத்தின் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும், விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை எல்லாற்றையும் எதிர்நோக்கி நாட்டின் அபிவிருத்திப் பணிகளை உரியவாறு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கமுன கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் புதிய இருமாடிக் கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரஜரட்ட விவசாய மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிய தீர்க்கப்படாத நீர் பிரச்சினைக்கு தீர்வாக மொரகஹகந்த பாரிய நீர்த்தேக்கத்திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

கடந்த 40 வருட காலத்திற்கும் மேலாக அரசியல் மேடைகளில் வெறும் வாக்குறுதியாக மட்டுமே காணப்பட்ட இப் பிரச்சினைக்கு தற்போதைய அரசினாலேயே தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கத்தின் போது அரசாங்கம் என்ற வகையில் மிகவும் முறையாகவும் வினைத்திறனான முறையிலும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்சியின் போது விவசாய மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே அரசினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்காக கமநல சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களும் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW