மைத்திரி அரசு விட்ட பிழைகளை மூன்றாவது வருடத்தில் சீர் செய்யுமா?

இலங்கையின் அரசியலில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய வரலாற்றுத் தேர்தல் என்றால் அது 2015ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் திகதிய ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடலாம். காரணம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் 2015ஆம் ஆண்டிற்கு முன்னரான காலம் இலங்கைவாழ் மக்களுக்கு ஒரு சவாலானதும் அச்சமுடையதுமான ஒரு ஆட்சிக் காலமாகவே இருந்தது என்பதனை மறுப்பதற்கு இல்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலம் மக்களுக்கு கருத்துச் சுதந்திரங்களையோ அல்லது எழுத்துச் சுதந்திரத்தையோ கொடுத்த அரசாக அமைய வில்லை. மாறாக அது அடக்கி ஒடுக்கப்பட்ட அல்லது ஒரு அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்ட அரசியல் கலாச்சாரமாகவே அதனை மக்கள் அனுபவித்தனர். இதன் காரணமாக மக்களின் கருத்துக்களுக்குப் பதிலாக மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ சர்வாதிகார கட்டளைகளுக்கே உட்பட்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது எனலாம்.
இவ்வாறானதொரு அச்சமுடைய அரசியல் ஆதிக்கத்திற்குள் ஆட்சியில் பங்காளர்களாக இருந்த அரசியல் வாதிகள்கூட தமது வாயை அடக்கி வாசிக்க அல்லது மௌனிகளாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலும் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்க அல்லது முன்வைக்க முடியாத நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா? இவர்களுடன் ஒத்துப்போவதா? என்ற விடயத்திற்கு அப்பால் விலகிச் சென்றாலும் நிம்மதியாக இருக்க முடியாது என்ற அச்சமும் பயமும்கூட ஒருசிலர் மத்தியில் அவர்களின் நிலை தாண்டவமாடிய வரலாறுகளை இந்த நாட்டின் அனைத்துத்தரப்பினரும் நன்கறிவர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பெரும்பான்மைக் கட்சியின் அமைச்சர்களாக இருக்கட்டும், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும், சிறுபான்மைக் கட்சிகளாக இருக்கட்டும் ஒன்றுக்கும் ஈடுகொடுக்க முடியாதளவு பொம்மைகளாக கையாலாகாத் தன்மையில் தமது காலத்தை ஓட்டிய வரலாறு அவர்களின் தற்போதைய வெளிப்பாடுகளில் இருந்து மக்கள் அனுபவ ரீதியாக அறிவதற்கான பாடத்தை நன்கு புகட்டியுள்ளது என்றே கூறலாம்.
இவ்வாறான நிலைமைகளுக்கும், அபாயங்களுக்கும் மத்தியில் இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மிகவும் ஒருமோசமான நிலைக்கு கொண்டு செல்லப்படுவதை இந்த நாட்டின் மூவினத்தையும் சேர்ந்த சமாதான விரும்பிகளும், அமைதியை விரும் தரப்பினரும் முற்றாக ஏற்றுக் கொள்ள வில்லை. என்றாலும் ஒரு சர்வாதிகாரப் போக்குடைய மஹிந்தவின் அரசியல் கலாச்சாரம் மக்களுக்கு மட்டுமல்லாது அவரின் ஆட்சியில் பங்குதாரர்களாக இருந்த பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியல் வாதிகளுக்கும்கூட வெறுப்புக்களையும், கோபத்தையும் ஏற்படுத்தியதே உண்மையான விடயமாகும்.
இந்த நிலைமைகளின் வெளிப்பாடே மஹிந்த அரசில் இருந்து அவருக்கு ஆதரவளித்த பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது உயிர்களையும் துச்சமென மதித்து அதிலிருந்து தமது அமைச்சுப் பதவிகளையும், ஏனைய பதவிகள், பொறுப்புக்களையும் தூக்கி எறிந்து விட்டு இந்த நாட்டு மக்களை அதாலபதாளத்திலிருந்து பாதுகாப்பதற்கு முன்வந்தனர் என்றால் அது மிகையாகாது.
இந்த முடிவகளின் வெளிப்பாடே இலங்கையின் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. குறிப்பாக 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும் அதில் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியுமாகும். இதுவரை காலமும் எதிரும் புதிருமாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் நலனுக்காகவும், மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்குமான முயற்சியாகும்.
மேற்படி முயற்சி இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்த வெற்றியையும், சுதந்திரத்தையும் கொடுத்ததுடன் இந்த நாட்டு மக்கள் விரும்பிய ஒரு தேசிய நல்லிணக்க கூட்டாட்சி அரசாங்கம் உருவாக்கத்திற்கும் காரணமாகியது எனலாம். இதன் காரணமாக நாட்டில் கடத்தல், அச்சுறுத்தல், ஊழல் மோசடிகள், கபடத் தனங்கள் போன்ற பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.
எனினும் இந்த அரசுக்கு மக்கள் எந்த விடயத்தினை முக்கியமாக முன்வைத்து வெற்றிபெற வைத்தார்களோ அந்த விடயத்தில் கடந்து வந்த இரு வருடங்களில் இந்த நாட்டில் சவாலாக இருக்கும் இனவாதம் என்ற விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அல்லது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்றே கூறலாம். அத்துடன் யுத்தத்தால் பாதிக்ககப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பாரிய இழுத்தடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை, அன்மையில் வில்பத்து காணி விடயத்தில் அதனை சூறையாட எடுத்திருக்கும் முடிவுகள், தொல்பொருள் என்ற விடயத்தில் முஸ்லிம்களின் மதஸ்தளங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக இந்த தேசிய அரசின் பூரணமான வெற்றிக்கு முதன்மை வகித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வெற்றியளித்ததாக இல்லை என்றே கூறலாம்.
குறிப்பாக இந்த நாட்டில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற தேர்தல் வாக்குறுதியுடன் ஆட்சிப் பீடம் ஏறிய அரசுக்கு எதிரணியினர் என்ற வகையில் ஜனாதிபதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணியினர் இந்த அரசை சிறப்பாக செல்வதற்கு பல வழிகளிலும் தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் மேற்கொண்டு வருவது ஒரு இழபறி நிலைமைகளையே காட்டிச் செல்கின்ற நிலையில் பௌத்த இனவாத சக்திகளும் இந்த அரசைக் குழப்புவதற்காக இனவாத விடயங்களை மீண்டும் ஏற்படுத்தி வருகின்றமையும் நல்லாட்சிக்கு தீங்கிழைக்கும் கைங்கரியங்களாகவே அமைகின்றது.
ஒருசில ஆளுங்கட்சி அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது பணிகளை நேர்மையுடன் இட்டுச் சென்றாலும் இந்த அரசில் அமைச்சர்களாக இருக்கும் மற்றறொரு சாரார்கூட குற்றச்சாட்டுக்களையும், குறைகளையும் முன்வைப்பது ஒரு பாரிய சிக்கள்கள் நிறைந்தவையாக இருப்பதையும் காண முடிகின்றது. அத்துடன் ஒருசில அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய முழு மூச்சுடன் செயற்பட்டு வரும் நிலையில் மற்றொருசாரார் முன்னைய அரசில் குற்றமிழைத்த ஒருசிலரை காப்பாற்ற தமது ஆதரவுகளை வழங்குவதும் இந்த அரசில் காணக்கூடிய நிகழ்வுகளாக இருக்கின்றன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் கடந்த இரு வருடங்களைக் கடந்து இந்த தேசிய நல்லிணக்க கூட்டாட்சி அரசு தமது காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. கடந்து வந்த இரு வருட பாதையில் பல அனுபவங்களையும், படிப்பினைகளையும் மட்டுமல்லாது தமது வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டிய வரடமாக இந்த மூன்றாவது வருடம் பிறந்துள்ளது.
இந்த வருடத்தில் அரசு குறிப்பாக சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் கவனஞ் செலுத்த வேண்டிய தேவைப்பாடுகளே முதன்மையானவையாக காணப்படுகின்றன. காரணம் இந்தச் சமுகங்கள் பல வருடங்களாக யுத்தம் மற்றும் இனவாதப் பிரச்சினைகளுக்குள் பாதிக்கப்பட்டவர்களாகவும், பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றனர்.
குறிப்பாக வடக்கை எடுத்துக் கொண்டால் கடந்த மூன்று தஸாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கிளன் மீள்குடியேற்றம், வீடமைப்பு விடயங்கள் தாமதமாகவும், தடைப்படுத்தப்படும் விடயங்களாகவுமே இருந்து வருகின்றன. இந்த விடயத்தில் வடக்கு முஸ்லிம்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இவர்களில் கணிசமானளவு மீள் குடியேறி விட்டார்கள் என்ற பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை அந்த மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் 80 சதவீதமானவர்கள் புத்தளத்தில் இன்று வரை அகதிகளாக இருக்கின்றனர் இதனை மீள் குடியேற்ற அமைச்சர் கண்டு கொள்ளாது இருப்பதும், அரசாங்கம் இவர்கள் விடயத்தில் மாற்றான்தாய் மனப்பான்மையில் இருப்பதும் நல்லாட்சியில் தற்போது விடப்பட்டுள்ள பாரிய குறைபாடாகவும், தவறாகவுமே இருக்கின்றதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதேபோல் பௌத்த கடும்போக்குவாத துறவிகளால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமய ரீதியாக வஞ்சிக்கப்படுவதும், தாக்கப்படுவதும், அப்பாவி பௌத்த மக்களிடத்தில் இந்தச் சமுகங்கள் தொட்பாக அப்பட்டமான பொய்யான தகவல்களை கொடுத்து விரோதிகளாக்குகின்றமை போன்ற விடயங்கள் மறைமகமாகவும், வெளிப்படையாகவும் இடம் பெறுவதால் அரசாங்கம் இந்த மூன்றாவது வருடத்தில் இனவாதிகளிடம் கொஞ்சிக்குலாவாது அவர்கள் மீது செயல் ரீதியாக கடமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் ஆணிவேரைப் பிடுங்கி இந்த நாட்டில் இனவாதமற்ற மூவின சமுகங்களைக் கொண்ட இன ஒற்றுமை நாடாக மிளிருவதற்கான சகல நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த தேசிய நல்லிணக்க கூட்டாட்சி அரசு கடந்த இரு வருடங்களில் தாம் விட்ட பிழைகளை நிவர்த்தி செய்வதுடன் தாம் கண்டு கொண்ட அனுபவங்களை அடிப்படையாக வைத்து ஏற்பட்டுள்ள குறைகளை சரியான முறைகளில் இனங்கண்டு சீர் செய்ய வேண்டிய ஒரு ஆண்டாக 2017 காணப்படுகின்றது என்ற செய்தியையே தெரிவிக்க வேண்டியுள்ளது.
எனவே அரசாங்கம் நம்பி வாக்களித்த மக்களுக்கு தமது துரோகம் செய்யாது மக்களின் குறைபாடுகளை சீர் செய்து குறைகளைத் தீர்க்கும் ஒரு ஆண்டாக இந்த ஆண்டை பிரகடனப்படுத்தி மக்களின் மனங்கள் மகிழ்வடையும் வகையில் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் மக்கள் இருக்கின்றனர்.