கருணா, சு. க.விலிருந்து விலகி புதிய கட்சி தொடக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட அவர் தற்போது, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (Tamil United Freedom Front - TUFF) எனும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய அரசியல் கட்சி, மட்டக்களப்பில் வடகிழக்கிணை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக
அக்கட்சியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்தார்.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11), மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இப்புதிய கட்சியின் உருவாக்கத்திற்கு மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சி தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித காத்திரமான விடயங்களையும் மேற்கொள்ளாத நிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி இக்கட்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த முரளிதரன், மட்டக்களப்பை மையமாகக் கொண்டு இயங்கவுள்ள இக்கட்சியின் அலுவலகத்தை மட்டக்களப்பில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதே போன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் இதன் கிளைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம், வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும் செயற்படவுள்ள அதேவேளை வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் போராளியான விநாயக மூர்த்தி முரளிதரன், கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது, அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து, அரசாங்கத்துடன் இணைந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசில், தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக பதவி வகித்த அவர், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட, குண்டு துளைக்காத வாகனமொன்றை, மீண்டும் ஒப்படைக்காது முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நவம்பர் மாதம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
விநாயகமூர்த்தி முரளிதரன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நுகேகொடவில் இடம்பெற்ற கூட்டத்திலும் பங்குபற்றியிருந்த அவர், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கூட்டத்தில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.