முந்தல் பரலங்கட்டுவில் புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரலங்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டம் ஒன்றில் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கடந்த நேற்றுமுன்தினம் (14) குறித்த தோட்டத்தை சுற்றிவளைத்த முந்தல் பொலிஸார் இச்சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
வெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றிலேயே இவ்வாறு புதையல் தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது அங்கிருந்து புதையலைக் கண்டறியும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கேனர் கருவியுடன் அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம், பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த லொறி, பூஜை பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் பயணித்த் வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கலேவெலப் பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி, அவருடைய வேலையாள், சிலாபம் பகுதியைச் சேர்ந்த இருவர், இத்தாலியில் இருந்து வந்த ஸ்கேனை பயன்படுத்தும் மாரவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆண்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெகோ மற்றும் லொறியின் சாரதி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (15) சனிக்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோகர் சமன் ஏக்கநாயக்கா தலைமையிலான குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
( நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)