கந்தளாய் பிரதேச மீனவர்கள் தொடர்பான பிரச்சினை முள்ளிநியூஸ்

கந்தளாய் பிரதேச மீனவர்கள் தொடர்பான பிரச்சினை



fish

ஏழை மீனவர்களுக்காக கடந்த வருடம் வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகள் கள்ளத்தனமாக மீன்பிடி உதவி பணிப்பாளரினால் விற்பனை செய்யப்பட்டமையினால் ஏழை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.

ஏழை மீனவர்களுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டமையினால் உதவி மீன்பிடி பணிப்பாளர் கைது செய்யப்பட்டார் இதனால் அதற்கான வெற்றிடம் இன்றும் நிலவிக் கொண்டிருக்கின்றது எனவே மீன்பிடி அமைச்சர் உதவி மீன்பிடி பணிப்பாளர் ஒருவரை நிரந்தரமாக நியமனம் செய்து பாதிக்கப்பட்ட ஏழை மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

இன்று 18ம் திகதி கிழக்கு மாகாணசபையின் 80வது மாதாந்த அமர்வு தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் காலை 9.15 மணியளவில் ஆரம்பமாகியபோது மாகாண சபை உறுப்பினர் D. மெத்தானந்த சில்வாவினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணையான அம்பாறையில் சிங்கள மீன்பிடி பரிசோதகர்கள் இருவரை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கந்தளாய் குளத்தில் நன்னீர் மீன்பிடி நடவடிக்கையில் மூவின மக்களும் ஈடுபட்டுவரும் சூழலில் 49 சிறுபான்மை மீனவ குடும்பங்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதை மீன்பிடி பரிசோதகர் தடுத்தமையினால் அப்பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன.

அதேவேளை அம்மீனவர்களுக்கு மாற்று ஒழுங்குகளை செய்து வள்ளங்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட உதவுவதாக குறிப்பிட்டும் இற்றைவரை அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் திருகோணமலை கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க 06 நிபந்தனைகளின் பேரில் 7 கிலோமீற்றருக்கு அப்பால் சுருக்கு வலைகளை பயன்படுத்தி கங்கையிலிருந்து, புல்மோட்டை வரையான கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்க மீன்பிடித் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அனுமதி பத்திரத்தில் மீன்பிடி திணைக்களம் 7 கிலோமீற்றர் என குறிப்பிட்டுள்ளதை,கடற்படை 7 கடல் மைல்கள் என குறிப்பிட்டு அப்பாவி மீனவர்களை அநாவசியமாக கைது செய்கின்றனர்.

அதுமட்டுமல்லாது பிரசித்திபெற்ற புறாமலை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசம் 1 கிலோமீற்றர் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் மீன்பிடித்தொழிலாளர்கள் கரையேறும் போது இப்பகுதியால்தான் வரவேண்டும் இதனை கடற்படையினர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் எனக்குறிப்பிட்டு மீன்பிடிப்பாளர்களை கைது செய்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் குறித்த அமைச்சர் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW