கட்டார் மாணவர்களுக்கு எதிராக ‘கெடுபிடி’: ம.உ. குழு முறைப்பாடு!
சவுதி, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி பயிலும் கட்டார் மாணவர்கள் கல்வி நிறுவனங்களின் கெடுபிடிக்குள்ளாகி வருவதாக கட்டார் மனித உரிமைகள் குழு (NHRC) யுனெஸ்கோவில் முறைப்பாடு செய்துள்ளது.
மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காதிருத்தல், பரீட்சைகளில் அமர்வதற்கு இடையூறு விளைவித்தல் உட்பட கட்டார் மாணவர்கள் பல்வேறு கெடுபிடிகளுக்குள்ளாகி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாறு 85 சம்பவங்களும் சவுதியில் 29 மற்றும் பஹ்ரைனில் 25 சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட நிலையில், தமது நாடுகளில் உள்ள கட்டார் பிரஜைகளை 14 நாட்களுக்குள் வெளியேறுமாறு குறித்த நாடுகள் அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.