கட்டட விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு, >>இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி - 20 மணி நேரம் கழித்து மீட்பு!
May 01, 2023
Accident
,
All News
,
India
,
World
மும்பையில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளி 20 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டார்.
மும்பை அருகிலுள்ள பீவாண்டி என்ற இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. அதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும்பணியில் தீயணைப்புத்துறையினரும், தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும் சேர்ந்து ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
மேலும், ஒன்பது பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்புப்படையினர் தொடர்ந்து தேடிவந்தனர்.
நேற்று இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது உள்ளிருந்து லேசாக சத்தம் வந்தது....
உடனே மெதுவாக இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது உள்ளே சுனில் என்ற தொழிலாளி உயிருடன் இருந்தார். அவரை மீட்புப்படையினர் மீட்டனர். 20 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்தார். அவரை மீட்டவுடன் கையெடுத்து கும்பிட்டு `எனக்கு இரண்டாவது வாழ்வு கொடுத்திருக்கிறீர்கள்’ என்று மீட்புப்படையினருக்கு சுனில் நன்றி தெரிவித்தார்.
அவர் விபத்து நடந்தபோது அங்கிருந்த குடோனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.
சுனிலுக்கு நேற்று பிறந்தநாளாகும். பிறந்தநாளில் அவருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ``நான் கட்டடத்தின் சுவருக்கும், இடிந்து விழுந்த ஸ்லாப் ஒன்றுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கியிருந்தேன்” என்று தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டடம் 2014-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. மிகவும் தரமற்ற பொருள்களைக்கொண்டு கட்டியதால் கட்டடம் குறுகிய காலத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்கிறார்கள்.
சுனில் மனைவி ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தார். சுனில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது குறித்து அவரின் மனைவிக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. இடிந்து விழுந்த கட்டட உரிமையாளர் இந்திரபால் பாட்டீல் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கட்டட ஒப்பந்ததாரர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். இடிந்து விழுந்த கட்டடத்தின் கீழ்தளம், முதல் மாடியில் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்றின் குடோன் இருந்தது.
இரண்டாவது மாடி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்றாவது மாடி கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. அதில் பிளாஸ்டிக் சீட் மூலம் தற்காலிக குடில் அமைத்து தொழிலாளர்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
