பதுளை பணிப் பெண்ணின் மரணம் : பொலிஸார் தாக்கியுள்ளமை தொடர்பில் விசாரணையில் தகவல் முள்ளிநியூஸ்

பதுளை பணிப் பெண்ணின் மரணம் : பொலிஸார் தாக்கியுள்ளமை தொடர்பில் விசாரணையில் தகவல்



வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் 42 வயதான பணிப்பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 பொலிஸ் உள்ளக தகவல்கள் ஒருவன் செய்திச் சேவைக்கு வெளிப்படுத்திய தகவல்களின் படி, குறித்த பெண் மீது வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரையிலான விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக உயிரிழந்த பெண்ணின் கைது தொடர்பில் பொலிஸார் முறையாக செயற்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரது கைது சட்ட விரோதமானது என்பதற்கான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் ஒருவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தன.

குறிப்பாக குறித்த பணிப் பெண்ணை கைது செய்ததும் பொலிஸ் புத்தகத்தில் அதற்கான பதிவினை இட்டிருக்க வேண்டிய தேவை இருப்பினும், அவ்வாறு வெலிக்கடை பொலிசார் செய்யாமல், அப்பெண்ணை தடுத்து வைத்து தாக்கியுள்ளதாகவும், 11ஆம் திகதி சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டுக்கு அமைய அன்றைய தினமே பொலிஸார் சட்ட விரோதமாக பணிப் பெண்ணை கைது செய்துள்ளமை தொடர்பிலும் பொலிஸ் விஷேட விசாரணை பிரிவின் விசாரணையில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது பொலிஸ் தாக்குதலில் மயக்க நிலையை அடைந்த பின்னரே வெலிக்கடை பொலிஸார் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தங்கநகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

42 வயதான ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பணிப் பெண் கடந்த 11ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எனினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக அவரின் கணவர் செல்வதுறை யேசுராஜ் குறிப்பிட்டார். பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் விசாரணைப் பிரகாரம், பணிப் பெண்ணின் மரணத்துக்கு காரணம் பொலிஸ் தாக்குதலினால் ஏற்பட்ட பயம் அல்லது வேறு நோய் நிலைமை அதிகரித்தமையா அல்லது பொலிஸாரின் தாக்குதலா என உறுதி செய்யப்படாத போதும் அவரின் மரணம் சட்ட விரோத பொலிஸ் கைதின் போது நிகழ்ந்துள்ளமை தெளிவாவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஒருவன் செய்திச் சேவைக்கு கூறினார்.

உயிரிழந்த பணிப் பெண்ணின் சடலம் கடந்த 12ஆம் திகதி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 13ஆம் திகதி பதுளை தெமோதரையில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுதர்மா நெத்திகுமார தெரிவிக்கையில் , ஒரு மாத்திற்கு முன்னர் தாம் வௌிநாடு சென்றிருந்த போது வீட்டிலிருந்த தங்க மோதிரம் ஒன்று காணாமல் போயிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அப்போது அதனைத் தேட முடியாது போனதையடுத்து, ஒரு மாதம் 10 நாட்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்னர் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகிய மூவரில் ஆண் மட்டுமே வீட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு பெண்களில் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிந்த போதிலும், ராஜகுமாரி தனது தொலைபேசி இலக்கத்தை மாற்றியிருந்ததாக சுதர்மா நெத்திகுமார தெரிவித்தார்.

இதன் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார். சம்பவத்தில் உயிரிழந்த, பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 42 வயதான ராஜகுமாரி மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW