வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட்டுகொல்ல உத்தரவு.... முள்ளிநியூஸ்

வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட்டுகொல்ல உத்தரவு....

பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் இராணுவம் முன்னதாக கூறியிருந்தது. மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. 



மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் இராணுவம் முன்னதாக கூறியிருந்தது. மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப்பரவலான வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில், பல இடங்களில் வீடுகள் தீயில் எரிவதைக் காண முடிகிறது. சுராசந்த்பூரில் ஒரு ஆயுதக் கடைக்குள் சிலர் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதை ஒரு வீடியோவில் காணலாம். இருப்பினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அத்தகைய படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் எதையும் பிபிசி உறுதிப்படுத்தவில்லை. 

 இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமையன்று மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் பேசினார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார். இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைதி காக்குமாறு மாநிலத்தின் எல்லா சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 (நன்றி - பிபிசி)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW