சமந்த குமாரவின் மரணம் : போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 7 அதிகாரிகள் சி.ஐ.டி.யால் கைது
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் பொறுப்பிலிருந்தபோது உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த பிரீத்தி குமாரவின் கொலை தொடர்பில் 7 பேரை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் , பொலிஸ் சார்ஜன் தர அதிகாரி ஒருவர், 5 பொலிஸ் காண்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் உத்தரவில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் நேரடி கட்டுப்படடில், உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் கீழான குழு முன்னெடுத்த விசாரணைகளில் இந்த 7 பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் பொறுப்பிலிருந்தபோது உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த பிரீத்தி குமார ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி தீர்மானித்தது.
பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது, அவர்களின் தாக்குதலினால் சமந்த ப்ரீத்தி குமார உயிரிழந்துள்ளமை சான்றுகள் ஊடாக புலப்படுவதாகவும், குற்றம் ஒன்று நடந்திருப்பதனை சான்றுகள் வெளிப்படுத்துவதால், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
நீண்ட சாட்சி பகுப்பாய்வுகளின் பின்னர், நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த ப்ரீத்தி குமார, போதைப் பொருளுடன் எந்த தொடர்பும் அற்றவர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 7 பொலிஸ் அதிகாரிகளும் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த ப்ரீத்தி குமார, நாரஹேன்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நண்பருடன் மதிய உணவிற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்தார்.
அவரது நண்பர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சமந்த ப்ரீத்தி குமார தான் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஜீப்பில் வந்த சிலர் அவரை அழைத்துச்சென்றிருந்தனர்.
பின்னர் சமந்த ப்ரீத்தி குமாரவின் சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விசாரணையின் போது, அந்த வலையமைப்பின் முக்கிய புள்ளி என்ற சந்தேகத்தின் பேரில் சமந்த பிரீத்தி குமார கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அப்போது தெரிவித்திருந்தார்.
விசாரணையின் போது, போத்தல் ஒன்றை இரண்டாக உடைத்து சந்தேகநபர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதன்போது அத்தககுதலில் இருந்து தம்மை காப்பாற்ற பொலிஸார் குறைந்தபட்ச பல பிரயோகம் செய்ததாகவும் நிஹால் தல்துவ அப்போது கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றில் முன் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் பிரகாரம் சமன் குமார மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரத்தம் கசிந்து அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.
இந் நிலையிலேயே, சந்தேக நபர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
