இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இவ்வருடம் தொடர்பான தரவு அறிக்கைகளின் பிரகாரம் செலவுகள் காட்டப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் 60 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 63,820 ரூபாவாக காணப்பட்டது.
ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவில் 53 வீதம் அதாவது 40,632 ரூபா உணவுக்காகவும், எஞ்சிய 47 வீதம் அதாவது 35,492 ரூபா உணவு அல்லாத தேவைகளுக்காகவும் செலவிடப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள அந்த அறிக்கையின்படி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையிலுள்ள குடும்பங்களின் உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்படும் அதிகளவான தொகையானது கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிட வேண்டியுள்ளதாகவும், இது உணவு அல்லாத செலவினங்களில் 23 வீதமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
