ஓமானில் சிக்கி தவிக்கும் இலங்கை இளைஞர்கள் முள்ளிநியூஸ்

ஓமானில் சிக்கி தவிக்கும் இலங்கை இளைஞர்கள்

ஓமானில் சிக்கி தவிக்கும் இலங்கை இளைஞர்கள்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஓமானுக்கு ஆட்கள் கடத்திய சம்பவம் தற்போது வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஓமான் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்ற பெண்கள் அங்கு பணத்திற்காக விற்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு ஓமானிய தூதரக அதிகாரி ஒருவரின் ஆதரவும் கிடைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 இதனையடுத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஓமான் நோக்கிச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

 மனித கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக இருந்த ஈ.குஷான் மற்றும் மேற்படி கடத்தலில் தரகராக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், மனித கடத்தல் சம்பவம் மீதான கவனம் படிப்படியாக குறைந்து வரும் பின்னணியில், தற்போது பெண்களுக்கு பதிலாக ஆண்கள் மனித கடத்தலின் இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இதன்படி, நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய ஆண்களை இலக்கு வைத்து இந்த கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கும்பல், அவர்களிடமிருந்து ஐந்து முதல் 15 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, ஓமான் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

 சுற்றுலா விசாவில் இவர்களை ஓமானுக்கு அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள், ஓமானின் பல்வேறு நகரங்களில் தவிக்கவிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். ஓமானில் உள்ள மஸ்கட், குபேரா, பராக்கா, அல் குவேர், மபேலா, அசிபா ஆகிய நகரங்களில் கட்டிடங்கள் மற்றும் வெளிப்புற பொது வெளியில் தங்கியிருப்பதாகவும் ஆதரவற்று தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 மேற்படி நகரங்களில் வேலையின்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் சிலர் கட்டிடங்களில் தங்கியிருப்பதால் தங்கும் விடுதி கட்டணம், தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலில் அவர்களைப் பிடித்ததாகக் கூறப்படும் கடத்தல்காரர்களில் இலங்கைப் பெண் ஒருவரைப் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. களனி சிங்காரமுல்ல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த பெண்ணும் சம்பந்தப்பட்ட மோசடியில் பங்குதாரராக உள்ளதோடு, இவர்களுக்கு ஓமானில் வேலை வாங்கித் தருவதாகவும், வேலை தரத் தவறினால் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள முத்திரைகளில் கையெழுத்திட்ட கடிதத்தில் கையொப்பமும் இடப்பட்டுள்ளது.

 எனினும், ஓமானிய குடிவரவு சட்டத்தின் படி, சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வரும் எவருக்கும் வேலை கிடைக்காது. மேலும் இந்த கடத்தலுக்கு முகம் கொடுத்த இலங்கையர்களுக்கு நாட்டுக்கு திரும்பி வருவதற்கு தேவையான பணத்தை கூட சம்பாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பது உண்மையே. 

 பொருளாதார நெருக்கடியில் இருந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான நிலைமைகள் காரணமாக கடத்தல்காரர்களிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களும் நடுத்தர வயதினரும் வெளிநாடுகளில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW