முன்னாள் காதலியின் அட்டகாசம் மனைவிக்கு ஏற்பட்ட சோகம்
August 13, 2023
All News
,
AllNews
,
Crime
,
India

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மென்பொறியாளர் பார்த்திபன் (31). இவருக்கும் மென் பொறியாளர் பிரியா என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 11) பார்த்திபன் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார்
அப்போது அந்த வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று பார்த்திபனை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபனின் தாயார் ஆஷா பிந்து காரை மடக்க முயன்றுள்ளார்.
அப்போது கார் அவரை மோதிவிட்டு, நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் காயமடைந்த ஆஷா பிந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பிரியா, வேளச்சேரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்த்திபனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காஞ்சிபுரத்தில் பார்த்திபன் இருப்பது தெரியவந்தது. காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து பார்த்திபனை மீட்டனர்.
பின்னர் இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கடத்தலில் ஈடுபட்டது பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கடத்தப்பட்ட பார்த்திபன் கல்லூரியில் படிக்கும் போது ராணிப்பேட்டையை சேர்ந்த சவுந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஏழு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சவுந்தர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், பார்த்திபனின் பெற்றோர் சவுந்தர்யாவை வேண்டாம் என்று கூறியதாலும், கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பார்த்திபன் கடந்த ஜூலை மாதம் பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா, பார்த்திபனுடன் ஏற்பட்ட காதலை மறக்க முடியாமல் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இன்றி இருந்துள்ளார்.
மேலும் சவுந்தர்யா இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.
இதனையடுத்து தனது தாயார் உமா (50), துணை ராணுவ வீரர் மாமாவின் மகன் ரமேஷ் (39), நங்கநல்லூரை சேர்ந்த கார் ஓட்டுனரான சித்தப்பா சிவகுமார் (48), ஆகியோருடன் சேர்ந்து பார்த்திபனை காரில் கடத்தியுள்ளனர்.
பின்னர் கடத்திய பார்த்திபனை, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று மிரட்டி சவுந்தர்யா திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சவுந்தர்யா, அவரது தாயார் உமா, உறவினர்கள் ரமேஷ் மற்றும் சிவகுமார் ஆகிய நான்கு பேர் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW