இஸ்ரேலின் அமைச்சரவை போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தொடர் தாக்குதல்களாலும், இஸ்ரேலின் எதிர் தாக்குதல்களாலும் இரு நாடுகளிலும் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 100 இஸ்ரேலிய பொதுமக்கள் இன்னமும் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியின் கட்டுப்பாட்டி வைத்துள்ள ஹமாஸ் போராளிகள் நேற்று (07) அதிகாலையில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து சுமார் 7,000 ஏவுகணை தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த தாக்குதலுக்கு அல்-அக்ஸா தாக்குதல் என்று பெயரிடப்பட்டது.
கடந்த செப்டெம்பர் மாதம் பாலஸ்தீனியர்களின் புனித ஆலயமான அல் அக்ஸா மசூதியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டமையே இதற்குக் காரணம்.
தாக்குதலின் கீழ், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் இறுக்கமான பாதுகாப்புகளை உடைத்து வான், கடல் மற்றும் தரை வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர்.
இரக்கமற்ற ஹமாஸ் தாக்குதலில் பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
தற்போது கூட இஸ்ரேலில் 8 இடங்களில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஹமாஸ் தாக்குதல்களால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 100 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் வீரர்கள் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இஸ்ரேலின் கருத்துப்படி, மோதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.
இதனிடையே பாலஸ்தீன தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள 150 இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 20 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இதை கறுப்பு தினம் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடுமையான பதிலடியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பை எச்சரித்துள்ளார்.
மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலை தாக்க ஆரம்பித்திருந்தது.
அதன்படி லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், தாக்குதல்களுக்கு ஈரானின் ஆதரவைப் பெற்றதாக ஹமாஸ் கூறுகிறது.
மேலும் ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக ஈரான் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW