இலங்கை முஸ்லிம்கள் – பாதை மாறும் பயணம்
(றாசிம் முஹம்மட் – ஏறாவூர்)
மரக்கலங்களில் வந்திறங்கிய வாள்வீரர்கள். கூடவே வணிகர்கள். “கிலாபத்” இருந்தபடியினால் தங்கள் வாள் நுனிகளை கூடாரங்கள் அமைக்கும் கம்புகளை மட்டுமே சீவ பயன்படுத்தியவர்கள். போர்த்துக்கேயர் “சோனகர்” என்றனர். தமிழர்கள் “சோணிகள்” என்றனர். சிங்களவர் “யோனகயோ” என்றனர் பின்னர் “தம்பிலா” என்றனர். ஆனால் இஸ்லாம் மட்டும் அவர்களை “முஸ்லிம்கள்” என்றது.
இலங்கை முஸ்லிம்கள். உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் அடிகள் விழுந்தனவோ அப்போதெல்லாம் உடனுக்குடன் தங்கள் தார்மீக ஆதரவை ஜனநாயக எதிர்பின் பல வடிவங்களில் வெளிக்காட்டியவர்கள். பல கோடி முஸ்லிம்களை தன்னகத்தே கொண்ட முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத தேசங்கள் இது பற்றி மொளனித்த போதேல்லாம் இவர்கள் தங்கள் சகோதர ஆதரவை ஆர்ப்பாட்டங்கள் ஊடாகவும், கண்டனக் கூட்டங்கள் ஊடாகவும், எழுத்துக்கள் ஊடாகவும் பல்வேறு விதங்களில் வெளிக்காட்ட தயங்கியதே இல்லை.
உலகில் அதிக அளவில் அமெரிக்க கொடிகளையும் இஸ்ரேலிய கொடிகளையும் எரித்த 10 நாடுகளை பட்டியலிட்டால் அதில் 10வது இடத்திலாவது இவர்கள் இருப்பார்கள்.
குறிப்பாக சொல்வதென்றால் தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொழுகை வந்து விட்டால் ஏகாதிபத்திய தேசங்களின் எம்பஸிகளின் வாயிற்கதவை குறைந்த பட்சம் 3 மணித்தியாலங்களிற்கு மூடி விடுவார்கள். அந்த அளவிற்கு இவரக்ளின் எதிர்ப்பின் உறுதி இருந்தது. சரி. இப்போதும் அவர்கள் அப்படியா என்றால்? எழுதுவதற்கு ஒன்றுமே எஞ்சியிருக்கப் போவதில்லை. கணத்த மொளனம். லிபியாவில்,சிரியாவில் நடந்த தாக்குதலிற்கு எதிராக ஒரு கண்டன கூட்டம் கூட நடாத்த முடியாத அளவிற்கு திசை மாறி நிற்கிறார்கள் இவர்கள்.
முஸ்லிம்களின் மீதான பேரினவாதத்திற்கு எதிராக, தெற்கிலங்கையின் பேரினவாத செயற்பாட்டிற்கு எதிராக என எதற்கும் எதிராகவும் எதுவும் செய்ய முடியாத ஹோமா நிலையில் முஸ்லிம் சமூகம் நிற்கிறது. எதிர்கால இருப்பு தொடர்பான அச்சம் ஒவ்வொரு முஸ்லிம் கிழவியின் முந்தாணைகளிலும் முடிச்சுக்களாய் ஆடி நிற்கின்றன.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளிற்கும் புரியவில்லை. ஆன்மீகவாதிகளிற்கும் தெரியவில்லை. மேட்டுக்குடிகளிற்றும் புரியவில்லை. பூட்சுவாக்களிற்கும் தெரியவில்லை.
நாளைய எதிர்காலம் பற்றிய கணிப்புக்கள். எழுந்து வரும் பேரினவாத பூச்சாண்டியின் அச்சங்கள். இவற்றை எதிர்கொள்வதற்கான வடிவங்கள். எதுவுமே கணிக்க முடியாத நிலை. அமெரிக்கா இலங்கையில் “லஷ்கர் ஈ தய்பா” செயற்படுகிறது என்று சொன்ன போது புரிந்து கொள்ள வேண்டிய விடயமிது. இங்கே “ஜிஹாத்” எதுவும் கிடையாது என அரசு சொன்ன போது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயமிது. நாம் உணரவில்லை. “உணற்ச்சி” என்ற ஒன்று இருந்தால் தானே நாம் உணர்ந்து கொள்வதற்கு. அதைத்தான் நாம் “கொக்கோ கோலா கல்chசரில்” தொலைத்து,தொலைந்து பல வருடங்களாகி விட்டதே.
அப்பிள் போனில் அரசியல் பேசும் சமூகம் நாம். மூன்றாம் கத்தத்திற்கு “தம்” புரியாணி போடும் சமூகம் நாம். செய்யும் பாவங்களை உம்ரா எனும் வோசிங் மெஷினில் வருடா வருடம் கழுவும் சமூகம் நாம். நாம் அரசியலில் மட்டுமா பச்சோந்திகள். சமூகவியலிலும் பச்சோந்திகளே. ஒழுக்கவியலிலும் பச்சோந்திகளே. மார்க்கவியலிலும் பச்சோந்திகளே். வேறு நிறம் மாறும் மிருகம் தெரியாததன் காரணமாகவே பச்சோந்திகள் என்று பல தரம் எழுத வேண்டியுள்ளது.
அல்லது அதையும் தாண்டிய மிருகங்கள் நாம். மாற்றம் வேண்டும். நிச்சயமான, சடுதியான மாற்றம் வேண்டும். இல்லையென்றால் சம்பிக்க ரணவக்க சொல்லும் “அப்துல் நசார் முதியன்சலாகே” எனும் பெயரிலேயே நாம் எமது பிள்ளைகளிற்கு பிறப்பத்தாட்சி பத்திரம் எடுக்க வேண்டியிருக்கும். மாற்றம் வேண்டும். இல்லையென்றால் நளின் டீ சில்லா சொல்லும் “ டகோபா” வடிவ பள்ளிவாயல்களிலேயே தொழுகை செய்ய வேண்டி வரும். மாற்றம் வேண்டும். இல்லையென்றால் மேயர் நாகராசா சொன்ன, துரைசாமி சொன்ன, சிவஞானம் சொன்ன, பிரபாகரன் சொல்லி சென்ற “இஸ்லாமிய தமிழராகேவே” நாம் நாளை வடகிழக்கில் வாழ வேண்டிவரும்.
இஸ்லாத்தின் பக்கம் நாம் பரிபூரணமாக உள்நுழைந்துவிடல் வேண்டும். தோப்புக்களும், நிகாப்களும், தஜ்வீத்களும் எம்மை இதில் நுழையச் செய்து விடாது. எம்மிடம் சிந்தனைரீதியான மாற்றம் தேவை. “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் எங்கே செல்ல போகின்றேன்? எனும் கேள்விகளிற்கான விடைகளில் இந்த மாற்றம் பதுங்கி நிற்கிறது. இலங்கை அழகான தேசம். வளங்கள் நிறைந்த தேசம். “இஸ்லாமிய நாடுகள்” என்று மார்தட்டிக்கொள்ளும் எத்தனையோ தேசங்களில் இல்லாத மதச்சுதந்திரங்கள் இந்த நாட்டில் உள்ளது. இது இறைவன் எமக்களித் பெரிய அருள். நாம் அதை வீணடித்து விட்டோம். இனியாவது நாம் கண் திறந்து கொள்வோம்.
இந்த நாட்டு மக்கள் எங்களது உயர்தரமான அஃலாக்குகளை கண்டே இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் தன்மை மிக்கவர்கள். நாம் முன்மாதிரி முஸ்லிமாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள். நல்ல மனிதர்கள் நிறைந்த நல்ல தேசத்தில் நாம் மட்டும் கெட்டவர்களாக வாழ்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்? . நாம் வாழ்வது தாருல் ஸலாமா அல்லது தாருல் ஹர்பா? எனும் கேள்விக்கு விடைகளை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறோம். “தாயின் பாதத்தில் சொர்க்கம் உள்ளது” என்ற பலவீனமான ஹதீஸை வைத்தே கோழைகளாக வளர்க்கப்பட்ட சமுதாயமல்லவா நாம். “வா…….. நிழலில் சொர்க்கம் உள்ளது” என்ற ஹதீஸ் மறைந்து போன மர்மம் மட்டும் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.
ஒரு தேசத்தில் பெரும்பான்மை சிறுபான்மை என்பதை தீர்மானிப்பது சனத்தொகை மட்டுமல்ல. கல்வி, விஞ்ஞானம், கலை என பல துறைகளை எந்த சமூகம் தம் கையில் வைத்திருக்கின்றதோ அதுவே பெரும்பான்மை சமூகம். இதையெல்லாம் விட மேலாக எந்த சமூகத்திடம் ஒழுக்கமும் நற்பண்புகளும் இருக்கின்றதோ அந்த சமூகமே பெரும்பான்மை சமூகம்.
ஆக வாய்ப்புக்கள் இன்றும் நம் கைகளைவிட்டு வெகு தொலைவு செல்லவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஆக துளிர்விட்டது மறைந்து கிழக்கின் எழுச்சியாக பரிணமித்துள்ளது ,திட்டமிட்ட முறையில் எம் தலைமுறையை நாம் தயார் செய்தால் இறுதி வெற்றி நமக்கே!! இல்லை.
அப்பிள் போனில் அரசியல் பேசி, பேஸ்புக்கில் உடலுறவுகொண்டு, கத்த வீட்டு தம் புரியாணி தின்று, பாவம் கழுவ உம்றா சென்று, ஷாகிர் நாயக் பயானை கேட்டு, இன்டர் நெட்டில் இஸ்லாமிக் சட்டிங் செய்து, ஈஸியாக சொர்க்கம் போகலாமென்றால்…… அதற்கு நம்மை அழைத்துச் செல்ல சம்பிக்க காத்திருக்கிறார். கம்மன்வில காத்திருக்கிறார்.
லப்டொப்பை மடியில் வைத்து நாளைய ஈழத்தை டிஸைன் செய்யும் பெயர் தெரியா புலம்பெயர் மறத்தமிழன் காத்திருக்கிறான். கூடவே நம் தேசத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் பொய் முகங்களுடன் காத்திருக்கிறார்கள். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW