"முஸ்லிம் மாணவர்களை காலில் வீழ்ந்து, வணங்குமாறு வற்புறுத்த எவருக்கும் உரிமையில்லை"

-விடிவெள்ளி MFM.Fazeer-
வத்தளை,
ராகுல வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம்
மாணவனை வகுப்பாசிரியருக்கு கெளரவம் செய்யும் முகமாக அவரது காலில்
விழுந்து வணங்க கட்டாயப்படுத்தியமையானது இலங்கை அரசியலமைப்பு
மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம்
உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு
தீர்ப்பளித்துள்ளது.
தனது பிள்ளையை
வகுப்பாசிரியரும் பாடசாலையின் தேரர் ஒருவரும் காலில் விழுந்து வணங்க
கட்டாயப்படுத்துவதாக வத்தளை அக்பர் டவுன் பகுதியைச் சேர்ந்த
எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் செய்த
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே ஆணைக் குழு
மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளது.
முறைப்பாட்டில்
ராகுல வித்தியாலயத்தின் அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும்
வகுப்பாசிரியை டப்ளியூ.பி.என்.ஜி. விதான பத்திரண ஆகியோர் பெயர்
குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இனி மேல் குறித்த பிள்ளையை
ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கக் கட்டாயப்படுத்துவதில்லை,
அவரது மத, கலாசார அனுஷ்டானங்களை தொடர தடை விதிப்பதில்லை உள்ளிட்ட
உறுதிகளை வகுப்பாசிரியர் ஆணைக் குழுவில் வழங்கியுள்ள நிலையில் இந்த
முறைப்பாடு மீதான விசாரணைகள் சுமுகமாக நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையிலேயே இனிமேல் இவ்வாறான மத உரிமைகளை மீறும் நடவடிக்கைகள்
எந்த பாடசாலைகளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதிபர்கள் மற்றும்
ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு
கல்வி அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமைகள்
ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடுகம இதற்கான பரிந்துரையை கல்வி
அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எச்.ஆர்.சி./735/16
என்னும் இலக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு
செய்யப்பட்ட முறைப்பாட்டில், தனது பிள்ளையை வகுப்பாசிரியர் காலில்
விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாகவும் தாம் பின் பற்றும் இஸ்லாம்
மதத்தின் பிரகாரம் இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க முடியாது
என்பதால் ஆசிரியையின் கட்டாயப்படுத்தலானது தமது மத உரிமையை
மீறுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது
தொடர்பில் ஆராய்ந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இஸ்லாம்
மதத்தின் பிரகாரம் ஒருவரை கெளரவப்படுத்துவதற்காக அவரை
இன்னொருவர் வணங்க முடியாது எனவும் வணக்கம் என்பது இறைவனுக்கு
மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்பது மதத்தின் அடிப்படை அம்சம்
என்பதையும் உறுதிச் செய்துள்ளது.
அதன்படி
இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரிவின்
10 ஆவது அத்தியாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மதத்தை
பின்பற்ற அல்லது விசுவாசம் கொள்ள பூரண உரிமை உடையவன் என்பதை
சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு,
தனது
மதம் கலாசாரம் உள்ளிட்டவற்றை பகிரங்கமாக பின்பற்ற
ஒவ்வொருவருக்கும் உரிமை, சுதந்திரம் உள்ளதாக உறுதி
செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.
அதன்படி,
முறைப்பாட்டாளர் தெரிவித்ததைப் போன்று அவரது மத உரிமை மீறப்பட்டால்
அவருக்கு அந்த உரிமை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டுள்ள இலங்கை
மனித உரிமைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்தக்கவர்களிடமும் சம்பவம்
குறித்து விசாரணை செய்துள்ளது.
அதன்படி இலங்கை மனித
உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள குறித்த
வகுப்பாசிரியை, தான் குறித்த பிள்ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க
கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதன் பிறகும் எந்த
கட்டாயப்படுத்தல்களையும் செய்யப் போவதில்லை எனவும்
உறுதியளித்துள்ளார்.
இந் நிலையில் ஒருவரின் மத
கலாசார உரிமைகளை மீறும் வண்ணம் பாடசாலையில் கெளரவப் படுத்தும்
நடவடிக்கைகள் அமைய முடியாது எனவும் அவ்வாறான முறையில் கட்டளைகளை
பிறப்பித்து கட்டாயப்படுத்த இலங்கையின் கல்வித் துறைக்கு சட்டத்தில்
இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு
தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்துள்ளது.
இந்
நிலையிலேயே இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக அனைத்து
பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி
அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.