நீதி கோரி வீதியிலிறங்கவுள்ள தாஜூதீனின் குடும்பம்; விசாரணை இழுபறியே காரணம்
தாஜூதீனின் கொலையுடன் கடந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவை மூடிமறைக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளதாக குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இக் கொலைக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம் என, குடும்பத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த தாஜூதீனின் மரணமானது, ஒரு கொலையென நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த விசாரணைகளில் நிரூபணமாகியுள்ளது. கொலைக்கான சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக பொலிஸ் உயரதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாய்திறக்கும்போது, இதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இதேவேளை, தாஜூதீன் கொலையுண்ட பிரதேசத்தில் காணப்பட்ட சீ.சீ.ரீ.வி கமராவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாத காரணத்தால், அதனை வெளிநாட்டிற்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த வழக்கு விசாரணையின்போது இதுகுறித்து நீதிமன்றால் வினவப்பட்டபோது, வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.