வாழ்க்கையை தொலைத்து உலகில் 13 கோடி மக்கள் பரிதவிப்பு
உலகம் முழுவதும் 13 கோடி பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக மனிதாபிமான தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
துன்பத்தில், துயரத்தில் வாழும் மக்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மனிதாபிமான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு இன்னல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தாராளமாக உதவி செய்ய வேண்டும். அநீதிக்கு எதிராக ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் சுமார் 13 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது நமது கடமை.
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் புகலிடம் தேடி ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். பல்வேறு நாடுகளில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உணவும் மருந்து பொருட்களும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
மனிதாபிமானத்தின் பெயரில் உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். போர், வறட்சி, வறுமை, முதுமை, நோய், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர, சகோதரிகளில் யாரையும் கைவிடக்கூடாது. அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டும்.
சிரியா முதல் தெற்கு சூடான், ஏமன் முதல் லிபியா, சோமாலியா முதல் ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் ஐ.நா. சபையின் தொண்டு ஊழியர்களும் அமைதிப் படையினரும் தங்கள் இன்னுயிர்களை ஈந்து அமைதியைப் பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.நா. சபையின் துணை பொதுச்செயலாளர் ஜேன் எலிசன் பேசியபோது, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஏமனில் பணியாற்றிய 109 ஐ.நா. ஊழியர்கள் உயிர் பலியாகி உள்ளனர். 110 பேர் படுகாயமடைந்துள்ளனர். 68 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும் செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW