சிறுமிகள் யுவதிகளுக்கு பாதுகாப்பற்ற நாடா இது?
(vidivelli)
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.
அவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் தினமும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகிக் கொண்டே வருகின்றன.
இரு வாரங்களுக்கு முன்னர் மாத்தறை பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் 30 க்கும் மேற்பட்ட நபர்களால் தொடராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.
இதனுடன் தொடர்புடைய 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்றுதான் கண்டி மாவட்டத்தில் ஹந்தானையில் அமைந்துள்ள தனியார் இளைஞர் பயிற்சி நிலையமொன்றில் கல்வி பயின்ற ஒரு தொகுதி யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்றுவரை இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு சம்பவங்களும் ஏக காலத்தில் நடைபெற்றிருக்கின்ற அதேநேரம் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. எனினும் இவற்றைப் போல் ஏராளமான சம்பவங்கள் தினமும் நாட்டில் நடந்த வண்ணமே உள்ளன என்பதே யதார்த்தமாகும்.
இலங்கையில் நாளொன்றுக்கு சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக 10 குற்றச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.
சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் கல்வியூட்டல் தொடர்பான பொலிஸ் பிரிவின் அலுவலர் குமார மனோஜ் சமரசேகரவே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்றுதான் வீட்டு வன்முறைகளை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு 60 வீதமாக இருந்த பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் 2013 ஆம் ஆண்டு 80 வீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
உலகில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் நடைபெறும் நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.
நாட்டில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு வகையில் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்.
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் செல்லும் பெண்களில் 95 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர் என இத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
பெண்களுக்கு எதிராகவும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராகவும் தொடரும் வன்முறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் இன மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப முன்வர வேண்டும்.
அதேவேளை இவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW