சுயதொழில் முயற்சிகளில் எமது இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும் -கிழக்கு முதலமைச்சர்
”இன்றைய எமது இளைஞர் யுவதிகளின் ஏகோபித்த தெரிவாகவும்,எதிர்பார்ப்பாகவும் அரச நியமனங்கள் மட்டுமே காணப்படுகின்றன.அது தவறும் பட்சத்தில் கடவுச் சீட்டுக்களை கைகளில் ஏந்திக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு காலநிலை தாக்கங்களுக்கு ஆட்பட்டு, தன்மானத்தினையிழந்து, உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி ஒப்பந்தக்காலம் முடியும்வரை கஷ்டப்படுகின்றனர்.
அரச நியமனங்கள் பெறுவதற்கும், வெளிநாடு சென்று கஷ்டப்படுவதற்கும் எடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியையாவது சுயதொழில் விடயங்களில் முதலீடு செய்தால் நல்லதொரு எதிர்காலத்தினை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு அநேகமான இளைஞர்கள் முன்வருவதில்லை.
யாரும் யாரிலும் தங்கியிருத்தல் என்கின்ற அவசியமில்லாமல் சுயமாக, யாருக்கும் கீழ்ப்படியாமல், தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழக்கூடிய நிலைமையை சுயதொழில்துறைகள் நிச்சயம் உருவாக்கித்தரும்.
அரச நியமனங்களில் கிடைக்கும் ஊதியத்தினை விடவும், பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித்தரும் சுயதொழில் முயற்சிகளில் எமது இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும்.”
தன்னால் அரசநியமனங்கள் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏறாவூர் பிரதேச இளைஞர் யுவதிகளுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையில் கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர்அஹமட் இவ்வாறு தெரிவித்தார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW