இன்றைய அரசியல் ஒரு மாயாஜால சூனியக் கலை
மக்களை ஏமாற்றி அரசியல் சூதாட்டம் நடத்தும் கும்பல் தமது மனச் சாட்சிகளுடன் எத்தகைய குரீரமான யுத்தத்தில் இருப்பார்கள் என எண்ணிப் பார்க்கவே மயிர் கூச்செறிகின்றது.
தங்களைத் தாங்களே ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக் கொண்டு ஊரையும் உலகையும் ஏமாற்றி வளம் வருவதென்பது சாமான்ய மயாஜாலக் கலையாக இருக்க முடியாது.
காலாவதியான வெற்றுக் கோஷங்கள் , காட்டு தர்பார்கள், அண்டிப் பிழைக்கும் அடிவருடிகள், அந்தி சந்திகளில் அடியாட்கள் தடியெடுத்த வேடர்கள், கூத்தாடிகள், கோமாளிகள், காண்ட்ராக்ட் கேட்டு நிற்கும் குபேரர்கள் அரங்கு அதிரும் ஆக்ரோஷங்கள்.
தூரு சீனாய் மலை அடிவாரத்தில் ஒரு ஒலிக்கீற்று போல் சில நம்பிக்கை தரும் நகர்வுகள், மூஸாவின் அஸாவுடன் கிளர்ந்தெழும் இளசுகள், சூனியக் காரர்களின் அரவங்கள் மாயமாய் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் சமுதாயம்.
சமுதாயம்: அரசியல் என்றால் தலைமைகள் மட்டுமல்ல, நாயகர்களை தாங்கி நிற்கும் ஜனங்களும் தான், அதனால் தான் அது ஜன-நாயகமானது, வங்குரோத்து அரசியலின் பின்னால் மக்களில் ஒரு சாராரும் இருக்கத்தான் செய்கின்றார்கள், மாற்றம் மக்களிடமும் வரவேண்டும், மக்களை வழி நடாத்துவோரே தலைவர்கள், மக்கள் வழி செல்வோரல்ல.
ஒற்றுமை : அது ஊசி துளையில் ஓட்டகை நுழைவது போலாயிற்று, வேற்றுமையில் ஒற்றுமை என மூஸாவின் கவ்மகள் போல் நாங்களும் பன்னிரண்டு அணியினராய் ஒரே திசையில் பயணிப்பதை தவிர மார்க்கம் வேறு இல்லை.
நம்பிக்கை; அது நம்ரூத் மூட்டிய தீ மலையில் ஹுத் ஹுத் பறவை கொண்டு வந்து கொட்டிய நீர்த் துளிகள் போன்றாகி விட்டது.
ஷைத்தானின் சாம்ராஜ்யத்தில் சத்தியத்தின் கரவான் என்றோ புறப்பட்டுவிட்டது, வரலாற்றுச் சமரில் சங்கிலித் தொடராய் சத்தியத்தின் காவலர்கள் விடியல் நட்சத்திரங்களாய் கிளர்ந்து வருவார்கள்.
அன்று எதிரி எதிரியாகவே இருந்தான், இன்று எதிரி நண்பனாக வீட்டுக்கு உள்ளேயும் இருக்கின்றான், இது தஜ்ஜால்களின் யுகம்.
கூட்டிக் கழித்து கணக்கு வழக்கு பார்த்து உடனடி விளைவுகள் தேடி மாத்திரமே களமிறங்க தெரிவுச் சுதந்திரம் இங்கு இல்லை, பாதை தெளிவானது, பயணம் முடிவானது, கடமையை நாம் செய்வோம் விளைவுகளை அவனிடமே விட்டுவிடுவோம்.
சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் தான் சமர் என்றால் அணி இரண்டு மட்டுமே, ஒரு தரப்பில் நாம் இருந்து தானேயாக வேண்டும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW