புதுவை சட்டசபையை முற்றுகையிட முயற்சி: பணிநீக்க ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையில் ஏராளமான ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர்.
தேர்தல் அறிவிப்பு வந்ததையடுத்து இதுதொடர்பாக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கூட்டணி புகார் தெரிவித்தது. இதையடுத்து தேர்தல் கமிஷன் பொதுப்பணித்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 2,612 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இன்று அவர்கள் சட்டசபையை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதற்காக ஏராளமான ஊழியர்கள் சட்டசபை அருகே திரண்டனர். சிலர் சட்டசபை முன் பகுதியிலும், சிலர் பின்பகுதியிலும் குவிந்திருந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் தபால் நிலையம் அருகே கூடி இருந்தனர்.
அவர்கள் சட்டசபைக்குள் நுழைய வரலாம் என கருதி அனைத்து கேட்டுகளும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் தபால் நிலையம் அருகே கூடியிருந்த ஊழியர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் தீவைப்பதற்கு முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தீவைக்க முடியாதபடி தடுத்தனர்.
அப்போது ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். பின்னர் தெய்வீகனை கைது செய்து பெரியகடை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து நேரு வீதிக்கு ஊர்வலமாக சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.