இப்றாஹீம் அன்சார் மீதான, தாக்குதல் முட்டாள்தனமானது - பாராளுமன்றத்தில் சம்பந்தன் சீற்றம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இலங்கையர்கள் இருந்தால், அவர்களை நாட்டுக்கு வரவழைத்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நாட்டில் குழப்பநிலைமையை ஏற்படுத்தவேண்டும் என்ற அரசியல் நோக்கம் கொண்டவர்களே இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
மலேசிய உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐ.ம.சு.மு எம்.பி தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இடம்பெற்ற இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தாக்குதல் நடத்தியவர்கள் மத்தியில் இலங்கையர்கள் எவரும் இல்லையென பிரதமர் கூறியிருந்தார். இருந்தாலும் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை நாட்டுக்கு வரவழைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடு ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலேயே இவ்வாறான தேவையற்ற முட்டாள்தனமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது.
ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. நாடு எப்பொழுதும் குழப்பநிலையில் இருக்க வேண்டும் என விரும்பும் அரசியல் நோக்கம் கொண்ட முட்டாள்தனமானவர்களின் செயற்பாடே இந்தத் தாக்குதல்.
இவ்வாறான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW