தமிழ் மக்களின் நிலங்களைத் திருப்பித் தர பான் கி மூன் வலியுறுத்தல் முள்ளிநியூஸ்

தமிழ் மக்களின் நிலங்களைத் திருப்பித் தர பான் கி மூன் வலியுறுத்தல்


இலங்கையில் ராணுவம் கையகப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை விரைவில் திருப்பியளிக்கவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டுள்ள ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா. செயலாளர் நாயகம் பான் கி மூன் வலியுறுத்தினார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற, இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

"ராணுவம் கையகப்படுத்திய நிலங்களை பொதுமக்களுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதன் மூலம், இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும். ஜனாதிபதி சிறிசேன இதுபற்றி என்னிடம் பேசும்போது, விரைவில் நிலங்களை திருப்பியளிப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதை என்னிடம் விளக்கினார்", என்றார் பான் கி மூன்.

வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள ராணுவம் பற்றிக் குறிப்பிடும்போது, "குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இதன் மூலம், மக்கள் அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வளர்க்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் வழியேற்படும்", என்றார் செயலாளர் நாயகம்.

பழைய தவறுகளுக்குப் பரிகாரம் தேட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

"பழைய தவறுகளுக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, நீதித்துறை, பாதுகாப்புப் படையினரின் நம்பத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மீட்டெடுக்க பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது", என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை அங்கீகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அவர், மனித உரிமைகளைப் பாதுகாக்க, இலங்கை மனித உரிமை அமைப்பின் சுதந்திரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார். நல்லிணக்கம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் மனித உரிமைகளுக்கும் இது முக்கியமானது என்று பான் கி மூன் குறிப்பிட்டார்.

உண்மை கூறல், பொறுப்புக்கூறல், அரசு அமைப்புக்கள் மறு சீரமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் மிக முக்கியமானவை என்று கூறிய ஐநா. செயலாளர் நாயகம், இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு என்பது இல்லை என்றார். அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்ற அவர், அரசியல் உறுதியும் வலிமையும் தேவை என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பான முன்னெடுப்புக்களுக்கு, இலங்கையுடன் ஐ.நா. எப்போதும் துணை நிற்கும் என்றும் பான் கி மூன் உறுதியளித்தார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW