பெங்களூரில் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு! ஒருவர் பலி

காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூர் ராஜகோபால் நகர் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான உமேஷ் (28) என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை பதற்றமாக இருப்பதாகவும், ஆனால் கட்டுக்குள் இருப்பதாகவும் காவல் துறை தலைவர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தீ வைப்பு சம்பவங்கள்
பெங்களூர், மைசூர், மண்டியா, தார்வாட் உள்பட பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பெங்களூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பேருந்துகள் ஒட்டுமொத்தமாக தீ வைக்கப்பட்டன. மொத்தம் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுதவிர, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 லாரிகள் கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW