உழ்ஹிய்யா கடமைக்கு, இடையூறு வேண்டாம் - பொலிஸார் சுற்றுநிருபம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் 2016.09.06 ஆம் திகதியிட்ட சுற்றுநிருபம் அனைத்துப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சுற்று நிருபத்தில் '2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் மாடுகள் (ஆண்) வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது பொலிஸ் நிலையங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான சட்டரீதியான ஆவணங்கள் இருந்தால் வீண் கால தாமதங்களை ஏற்படுத்தாது மாடுகள் விடுவிக்கப்பட வேண்டும். அனைத்து வீதி தடைகளிலும் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும்' என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்வாகம்) சி.டி. விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மிருகவதை தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது பின்பற்றப்படவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து முஸ்லிம்களின் உழ்ஹிய்யா கடமையை எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு பொலிஸின் ஒத்துழைப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உழ்ஹிய்யாவுக்கான மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது பொலிஸார் வீண் கால தாமதங்களை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும் கோரியிருந்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
உழ்ஹிய்யாவுக்கான மாடுகள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு கொண்டு செல்வதில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படமாட்டாது. அத்தோடு மிருகவதை சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். அது மீறப்படக்கூடாது என்றார்.
உழ்ஹிய்யாவுக்கு பிராணிகளை வண்டிகளில் அனுமதியின்றி ஏற்றி வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அனுமதி பெற்றதையும் விட கூடுதலான எண்ணிக்கையான பிராணிகளை எடுத்துச் செல்லக்கூடாது.
மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச்சீட்டு, மிருக சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் அவசியமாகும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW